கோவில் கோபுரத்தில் பல திருவுருவப் பொம்மைகள் இருப்பதைக் காண்கிறோம். கோபுரத்தில் இந்த பொம்மைகளை விருப்பபடியெல்லாம் வைத்துவிட முடியாது. அதற்கும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. கோபுரத்தின் அடிப்பாகத்தில் பிரம்ம தேவர் தொடர்புடையப் பொம்மைகளும், நடு பாகத்தில் மகாவிஷ்ணு தொடர்புடையப் பொம்மைகளும், மேற்பாகத்தில் சிவபெருமான் தொடர்புடையப் பொம்மைகளும் இடம் பெற்றிட வேண்டும். கோபுரத்தின் பக்கப் பகுதிகளில் தேவதைகள், ரிஷிகள், பக்தர்கள், பூதங்களின் உருவங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த உருவப் பொம்மைகளைச் செய்வதற்கும் சில இலக்கண விதிகள் உண்டு. அதற்கு, பிரதிமாலக்ஷணம் என்று பெயர்.
அந்தத் தெய்வ உருவங்களின் முகங்களின் அளவை விட உடல் பகுதி பத்து மடங்கு இருக்க வேண்டும். மற்ற தேவதைகளுக்கு முகத்தை விட ஒன்பது மடங்கு இருக்க வேண்டும். மனித உருவங்களுக்கு முகத்தைவிட எட்டு மடங்கும், வேதாளம், அசுர கணங்களுக்கு முகத்தைப் பொருத்தவரை ஏழு மடங்கும் இருக்க வேண்டும். துவார பாலகர், பூதகணங்களின் கண்கள் உக்கிர திருஷ்டியுடனும், கடவுள் உருவங்களின் கண்கள் அனுக்கிரக திருஷ்டியுடனும் இருக்க வேண்டும்.
கோபுரத்தில் தேவர்கள், மிருகங்கள், பறவைகள் என அனைத்து ஜீவராசிகளின் உருவங்களும் இடம் பெற்று இருக்கும். இவை சமத்துவத்தைக் குறிக்கின்றன. அனைத்து உருவங்களிலும் இறைவன் இருப்பதை இவை உணர்த்துகின்றன.