சைவங்கள்
உ. தாமரைச்செல்வி

தொண்டை நாட்டில் திருவொற்றியூர், திருமயிலாப்பூர் ஆகிய திவ்ய தலங்கள் இரண்டிற்கும் இடையில் அமைந்துள்ளது திருவேட்டு நகர். இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் திருவேட்டீடுவரர். அவரது புராணத்தை திருவேட்டீசுவரர் புராணம் என்று பண்டிதர் வெங்கடாசலம் பிள்ளை என்ற புலவர் பெருமான் இயற்றியுள்ளார். இப்புராணம் 10 படலங்களில் 423 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவேட்டீசுவரர் புராணத்தில், திருநந்திதேவர் படலத்தில் சில பாடல்கள் சைவத்தில் நாம் அறிய வேண்டிய அருமையான விளக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.
ஊர்த்வ சைவம் என்பது சிவன் ஒருவன் உண்டெனவும், அவன் தத்வாதீனன் என்றும், சடை, விபூதி, ருத்திராட்ச தாரணத்துடன் சிவபூஜை செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவவேடம் பொருளாகக் கொண்டு சிவத்தை தியானிப்பதே மூர்த்தி என்றும் சொல்லப்படும் சைவம்.
மற்ற சைவங்கள், அநாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம்,நிர்க்குண சைவம், அத்துவா சைவம், அவாந்தர சைவம், ஞான சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம், வீர சைவம், சுத்த சைவம் என்பன.
இவற்றில் ஆதி சைவம், அனந்த சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், எண்குணச் சைவம், நிற்குண சைவம் ஆகியவை பற்றி திருவேட்டீசுவரர் புராணம் ஆறு பாடல்களில் குறிப்பிடுகிறது.
ஆதி சைவம்
சிவனிடத்து மோகமாய், மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும், ஒழுக்கமும் பூண்டு எல்லாம் சிவ போகமாய் அனுபவித்து, விபூதி, ருத்திராக்ஷ சிவ வேடத்தின் மேல் நம்பிக்கையுடனிருந்து சிவனை அடைவதாகும்.
அனந்த சைவம்
அனந்த அல்லது அநாதி சைவமாவது, பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும், விபூதி, ருத்ராக்ஷ, சிவ வேடப் பொருளாகக் கொண்டு சிவத் தியானம் செய்து பாசம் நீங்கிச் சிவனை அடைவதே முக்தி என்பதாகும்.
மகா சைவம்
மகா சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவமூர்த்தியைச் சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானம் செய்து முக்தி பெறுவதேயாகும்.
பேத சைவம்
பேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து சிவனடியார் ஆசாரியார், சிவலிங்கம் ஆகிய இவைகளைப் பூஜித்து முக்தி அடைதல் என்பதாகும்.
அபேத சைவம்
அபேத சைவமாவது, விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து சிவ பாவனை (சிவோஹம்) செய்து சிவம் ஆதல் என்பதாகும்.
அந்தர சைவம்
அந்தர சைவமாவது, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படியிருத்தலை ஆராய்ந்து நாடுதல் முக்தி எனக் கூறும் சைவமாகும்.
எண்குணச் சைவம்
இறைவன் எண்குணத்தான் எனக்கூறும் சைவம் இது.
நிர்குண சைவம்
விபூதி, ருத்ராக்ஷ தாரணம் செய்து பஞ்சாக்ஷரம் ஜெபித்து நிர்குணனான சிவமூர்த்தியை அருவமாகத் தியானித்தல் நிற்குண சைவம் ஆகும்
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|