இந்து சமயத்தினர் வீடுகளில், நாள்தோறும் காலை, மாலை என்று இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது நல்லது.
“தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம”
தீபம் ஏற்றுவதால் சுபம், உடல் நலம், நன்மை, செல்வச் சேர்க்கை, நல்ல புத்தி போன்றவை பெருகும் என்பதே மேற்காணும் சுலோகத்தின் பொருளாகும்.
தீப பலன்கள்
திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது, சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன. வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து திருக்கோவில்களில் ஏற்றப்படும் தீபத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
கார்த்திகை மாதத்தில், வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள், திண்ணைகளில் நான்கு விளக்குகள், மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள், நிலைப்படியில் இரண்டு விளக்குகள், நடைகளில் இரண்டு விளக்குகள், முற்றத்தில் நான்கு விளக்குகள் இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றி வைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும் தீய சக்திகள் விலகி ஓடும். பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும். சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றினால் அன்ன தோஷம் ஏற்படாது. தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். முன்னோர்கள் ஆசி கிடைக்கும். பின் பகுதியில் நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது. தற்போதைய நகர வாசிகளுக்கு இது பொருந்தாது என்பதால், வீட்டிலினுள்ளேயும், வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றி வைத்துப் பலன்களைப் பெறலாம்.
தீப வகைகள்
* தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபங்கள், சித்திர தீபம் எனப்படுகிறது.
* அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம், மாலா தீபம் எனப்படுகிறது.
* வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம், ஆகாச தீபம் எனப்படுகிறது. கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.
* நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் எனப்படுகிறது. கங்கைக் கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத்திரையாக கங்கை தீரத்துக்குச் செல்பவர்கள், கங்கை நதிக்கு மாலை வேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்து, அதைக் கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங்களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இதனை நெளகா தீபங்கள் என்று அவர்கள் அழைக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் படகு எனப் பொருள்.
* வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுவது சர்வ தீபமாகும்.
* முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலயக் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது மோட்ச தீபம் எனப்படுகிறது.