ஒற்றைக் காலில் நின்றாடுகின்ற நிலையிலும் நடராசரின் தலை சமநிலையில் நேராக நிற்பதைக் காணலாம். இதே போன்று, தாண்டவமாடிய போதும், அவரது முகம் அமைதியானதாகவே இருக்கும். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்தக் கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்பதாக இருக்கும். நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தைக் குறிக்கிறது. ஆனந்தத் தாண்டவத்தில் பல திசைகளிலும் அவரது முடி பறந்தபடி இருக்கிறது. அதில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த முடியின் முடிச்சுகளில் சேஷநாகம் கால சுழற்சியையும், கபாலம் ருத்ரன் என்பதையும், கங்கை வற்றா அருளையும், பிறைச்சந்திரன் அழிப்பது மட்டுமின்றி, ஆக்கத்திற்கும் இவரே முதன்மையானவர் என்பதையும் குறிக்கின்றன.
பின் இடது கரத்தில் அக்னி, சிவன் என்பது சம்ஹார மூர்த்தி என்பதைக் காட்டுகிறது. நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது. இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தைக் குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்தச் சக்தியால்தான் மனிதர்கள் உயர்ந்த ஞானத்தை அனுபவ அறிவாகத் தேடலின் வழியாகப் பெறுகிறார்கள்.
வலது காலின் கீழே இருப்பது ‘அபஸ்மாரன்‘ எனும் அசுரன், ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராசர் தூக்கிய இடது காலைப் பார்த்துத் தஞ்சம் வேண்டியபடி இருக்கிறான். தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, ஐந்தெழுத்து மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.
இந்தக் கரம் யானையின் துதிக்கை போல் இருக்க, தூக்கிய இடது காலைப் பார்த்தால், அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டிச் சொல்கிறது.
பின் வலது கரம், ஐந்தெழுத்து மந்திரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி இருக்கிறது. இந்த உடுக்கை ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்று சொல்கிறார்கள். அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று அருளும் காட்சி, ஐந்தெழுத்து மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான், ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே என்று அறிந்து கொள்ளலாம்.
நடராசரின் திருவுடலில் நாகம் ஒன்று சுற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம், சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவரது இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியைக் காட்டுகிறது. அதற்குச் சற்று மேலேக் கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது.
சிதம்பரம், பொன்னம்பலத்தில் நின்றாடும் நடன சபேசரைச் சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவர் ஞானவெளியில் தாண்டவாமடுவதைக் காட்டுகிறது. ஒவ்வொரு தீ சுவாலையிலும் மூன்று சிறிய சுவாலைகளைக் காணலாம். அதன் மேலே, ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவுகளைக் குறிக்கிறது. நடராசர் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்தப் பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள். அவரே இறைவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவர். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவர். அவன் ஆக்கத்தினைக் கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார். அவரே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறார் என்று கொள்ளலாம்.