கார்த்திகை தீபத்திருநாள் வரும் போது, ஆலயங்களிலும், இல்லங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்டு ஏற்றப்படுகிற அகல் விளக்குகள் தொன்மை வாய்ந்தவை. ஆதி கால மனிதனுக்கு இருட்டை விலக்கிட விளக்கு தேவைப்பட்டது. அதற்காக ஈரமான களிமண்ணைக் கையால் பிசைந்து குழியாக்கிச் சிறு விளக்காகப் பயன்படுத்திக் கொண்டான். இந்த சிறு அமைப்பு தான் ‘அகல்’ ஆனது. அடுத்ததாக வந்த இரும்பு பயன்படுத்தும் காலத்தில் சிறு விளக்குகள் செய்யப்பட்டன. பின்னர், ஈரக்களிமண் அகல் செய்து, சூளை அமைத்து அதில் அதைச் சுட்டுப் பயன்படுத்தினான் மனிதன் என்று அகழ்வாராய்ச்சிகள் மூலமாக அறிய முடிகிறது.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களில் கார்த்திகை தீப நாளில் சுடுமண் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் களிமண் அகல் விளக்குகளில் 8, 4, 6 திரிகள் போட்டு ஏற்றும் அளவுக்குக் கூர்முனையோடு செய்து பயன்படுத்தப்பட்டது போளுவாம்பட்டி, திருவாமாத்தூர், தாரா சுரம், பழையாறை போன்ற தலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. செம்பினால் செய்யப்பட்ட 32 அகல் விளக்குகள் திருச்சோற்றுத்துறை சிவாலயத்துக்கு வழங்கப் பட்டதைக் கல்வெட்டுகளில் அறிய முடிகிறது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அகல் விளக்குகளைத் தானமாக அளித்ததைக் காண முடிகிறது. அகலில் தீபம் ஏற்றுவது மிகுந்த சக்தியைப் பரவச் செய்வதாக ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவதுண்டு.
பொதுவாக, கடுமையான துயரங்கள், வறுமை, பணக்கஷ்டம் வந்தால் அதைத் தீர்ப்பதற்கு, சீக்கிரம் நற்பலன் தருகின்ற வழிபாடாக, அகல்விளக்கு வழிபாடு இருக்கிறது.
நெய்யும் நல்லெண்ணெய்யும் கலந்து, மண் அகலில் தீபம் ஏற்றி, அதை ஒரு மண் உருண்டை மேல் வைத்து ஆயிரம் முறை கீழ்க்காணும் மந்திரத்தைக் கூறி வழிபட்டால், துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்கிற தொன்ம நம்பிக்கை இருக்கிறது.
‘ஓம் நமோ பகவதி பத்ம நேத்ரௌ வஜ்ர விக்ராயச
ப்ரத்யட்சம் பவதி’