திருக்கார்த்திகை நாளில் அனைத்துச் சிவாலயங்கள், முருகன், அம்மன் கோயில்களின் எதிரில் பனை ஓலைகளை ஒரு மூங்கில் கம்பில் கட்டி, கோபுரம் போலச் சொக்கப்பனை அமைத்து, அதனை சுவாமிக்கு பூஜை செய்த விளக்கைக் கொண்டு ஏற்றி, எரியச் செய்வார்கள். இந்தச் சொக்கப்பனை ஏற்றப்பட்டு எரியும் போது அஞ்ஞானமும் ஆணவமும் எரிக்கப்படுவதாக சிவ தத்துவம் சொல்கிறது.
சிவன் முப்புறம் எரித்த பாவனையைக் காட்டுவதற்காகச் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றுகின்றனர். மேலும், இதன் மூலம் சிவபெருமானை ஜோதி வடிவாகக் காண்கின்றனர். சிவபெருமானுக்கு சொக்கன் என்ற பெயர் இருப்பதால், சொக்கனை ஒளிவடிவில் இறைவனாகக் காணும் இந்நிகழ்வை சொக்கப்பனை என்கின்றனர்.