சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் “கிருஷ்ண” பட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத்தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.
சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும்.
விநாயகரின் சாபம்
சிவபெருமான், விநாயகரைக் கணங்களுக்குத் தலைவராக்கினார். அதனால்தான் கணநாதன் என்று அழைக்கப்பட்டார். நான்முகன் அஷ்ட சித்திகளையும் விநாயகரிடம் ஒப்படைத்து, சித்தி விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் சூட்டினார். இதன் காரணமாக, விநாயகப் பெருமான் நவக்கிரங்களில் பார்வையிட்டு, சந்திரனைப் பார்வையிடச் சென்றார். கிரகங்களில் சந்திரன் அழகானவர்; அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது.
ஆணவத்தால் யாரும் அறிவிழப்பர், கண்ணிழப்பர். ஆணவத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதை அறியாதவன் சந்திரன். எனவே, விநாயகப் பெருமானின் யானை முகத்தையும்,பானை வயிற்றையும் கண்டு, சந்திரன் பரிகாசமாக வாய்விட்டுச் சிரித்தான். இதனால் விநாயகருக்குக் கோபம் வந்தது. சந்திரனின் அழகை யாரும் காணமுடியாதபடி சபித்து விட்டார். “என் சாபத்தை மீறி, உன்னை யார் பார்த்தாலும் பழி பாவங்களுக்கு ஆளாவார்கள்.” என்று கூறினார்.
இதனால், நல்லவன் தீயவன் ஆவான். தர்மவான் பாவியாவான். உன்னைக் காண்பவர்கள் தூற்றப்படுவார்கள்” என்று விநாயகர் சாபமிட்டார்.
நான்முகன் கூறியபடி, பிரகஸ்பதி முனிவர் சந்திரனிடம் சென்று, சங்கடஹர சதுர்த்தி விரதமிருக்க வேண்டிய காலத்தையும், விவரத்தையும் கூறினார். அதன்படி தேய்பிறைக் காலத்தில், கிருஷ்ண பட்சம் நான்காவது நாள் சதுர்த்தி திதியில் வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டான்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
1. நினைத்த காரியம் கூடும்.
2. வீண் பழி அகலும்.
3. பகைவர்களும் நண்பர்களாவார்கள்.
4. தீவினை அகலும்.
5. மனச்சுமை நீங்கும்.
குறிப்பு: சங்கடஹர சதுர்த்தியன்று எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் வெகுநேரம் கழித்துத்தான் வானத்தில் தோன்றுகிறான்.
தொகுப்பு: தேனி பொன். கணேஷ்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.