சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற ஒரு கிரீடமாகும். இந்தச் சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்குப் பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. இதனால், இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யம் பக்தர்களிடம் குடிகொள்ளும். சடாரிக்கு சடகோபம் என்று மற்றொரு பெயரும் உண்டு. 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்று சொல்வதுமுண்டு.
சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப் பெறுகிறார். நம்மாழ்வாருக்கு சடகோபன் என்ற பெயரும் உண்டு. வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள். நம்மாழ்வார், பெருமாள் திருவடிகளை அடைந்தவர். அவரே குருவாக, இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்ப்பித்து நம்மை உய்விக்கிறார் என்பதும் நம்பிக்கை. வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.