நவநீத சேவை என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் கருட சேவைக்கு அடுத்த நாளன்று நடைபெறுகின்ற 15 கோயில்களின் பெருமாள்கள் உற்சவ மூர்த்தியாக ஒரே நாளில் ஒருவர் பின் ஒருவராகக் காட்சி தருகின்ற விழாவாகும். நவநீத சேவையை வெண்ணெய்த்தாழி உற்சவம் என்றும் அழைப்பர். கருட சேவைக்கு அடுத்த நாளன்று இச்சேவை நடைபெறுகிறது.
தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் வெண்ணைய்த்தாழியுடன் நான்கு வீதியையும் சுற்றிவருவது இவ்விழாவின் சிறப்பாகும்.
தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும் 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கின்ற வாய்ப்பு இங்கு அமைகின்றது.