இந்து சமயத்தில் பல்வேறு சாபங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில இங்கே...
பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை ஆதரிக்காமல் இருத்தல், மனைவியைக் கைவிடுவதல் போன்றவற்றால் பெண் சாபம் ஏற்படுகிறது. இச்சாபத்தால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்
இறந்த மனிதன் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுதல், அவருடைய உடலத் தாண்டுதல், இறந்த உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவிடாமல் தடுத்தல், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுத்தல் போன்றவைகளால் பிரேத சாபம் ஏற்படும். இச்சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம்
நமக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை மறத்தல், கற்ற கல்வியைத் தவறாக பயன்படுத்துதல், தான் கற்ற கல்வியின் மூலம் பெற்ற தகுதியினைத் தன்னிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில், அதனை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் மறைத்தல் போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. இச்சாபத்தால் வித்யா நஷ்டம், அதாவது படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்
பாம்புகளைத் தேவையின்றிக் கொல்லுதல், அவற்றின் இருப்பிடங்களை அழித்தல் போன்றவற்றால் சர்ப்ப சாபம் உண்டாகும். இச்சாபத்தால் கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்
முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களைச் செய்யாமல் மறத்தல், தாய்,,தந்தை, தாத்தா, பாட்டி போன்றோரை மதிக்காமல் இருத்தல், அவர்களை ஒதுக்கி வைத்தல் போன்றவை பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இச்சாபத்தால் பாலாரிஷ்ட சாபம் ஏற்பட்டு, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவை நிகழும்.
கோ சாபம்
பசுவை வதைத்தல், பால் மரத்த பசுவை வெட்டக் கொடுத்தல், கன்றுடன் கூடிய பசுவைப் பிரித்தல், தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதிருத்தல் போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இச்சாபத்தால், குடும்பம், வம்சத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை எப்போதும் காலால் உதைத்தல், பாழ்படுத்துதல், அழியாத, மக்கிப்போகாத பொருட்களைப் போட்டுப் புதைத்தல், தேவையற்ற பள்ளங்களை தோண்டுதல், அடுத்தவர் பூமியை அபகரித்தல் போன்றவைகளால் பூமி சாபம் ஏற்படும். பூமி சாபம் நரக வேதனையைத் தரும்.
கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்தல், ஓடும் நதியை அசுத்தம் செய்தல் போன்றவற்றால் கங்கா சாபம் ஏற்படும். இச்சாபத்தால் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுதல், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போகச் செய்தல், மரத்தை எரித்தல், மரங்கள் சூழ்ந்த இடத்தை அழித்தல் போன்றவைகளால் விருட்ச சாபம் ஏற்படும். இச்சாபத்தினால், கடன் மற்றும் நோய்கள் உண்டாகும்.
தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துதல், தெய்வங்களை இகழ்தல் போன்றவைகளால் தேவ சாபம் ஏற்படும். இச்சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவர்.
ரிஷி சாபம்
ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதித்தல் போன்றவற்றால் ரிஷி சாபம் ஏற்படும். இச்சாபத்தால் வம்சம் அழியும்.
முனி சாபம்
எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் செய்யாமலிருந்தால் முனி சாபம் ஏற்படும். இச்சாபத்தால் செய்வினைக் கோளாறுகள் எற்படும்.
குலதெய்வ சாபம்
நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து, வழிபடாமல் இருப்பதால் குலதெயவ சாபம் ஏற்படும். இச்சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.