இறைவழிபாட்டில் சங்குக்கு முக்கியப் பங்கு உண்டு. சங்குகளில் பதினாறு வகையான சங்குகள் இருக்கின்றன. இவற்றுள், வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும். மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையான சங்குகள் இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது. மேலும், தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
வைணவக் கோயில்கள் அனைத்திலும் விஷ்ணுவின் கையில் இருக்கும் சங்குக்கு மதிப்பளிக்கப்படுவது அனைவரும் அறிந்ததுதான். மகாபாரதத்தில் கூட, பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் சங்கு இருந்தது. தருமர் வைத்துள்ள சங்கு, ‘அனந்த விஜயம்’ என்றும், அர்ஜூனர் வைத்திருக்கும் சங்கு, ‘தேவதத்தம்’ என்றும், பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ‘மகாசங்கம்’ என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ‘சுகோஷம்’ என்றும், சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ‘மணிபுஷ்பகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் சங்கு, ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கு.
சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் போல, கார்த்திகை, சோம வார சங்காபிஷேகம் மிகவும் விசேசமானது. சங்காபிஷேகம் செய்ய இயலாதவர்கள் அதைத் தரிசித்தாலே அபிஷேகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை. இதற்காகவே, மதுரை, திருக்கடையூர், திருவாதவூர், திருவாடானை, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சி, மயிலாடுதுறை, திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களில் கார்த்திகை மாதத் திங்கள் கிழமைகளில் 1008 சங்குகள் வைத்து பூஜித்து சிறப்பாக அபிஷேகம் நடத்தப்படுகிறது.