கிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என்று இரு வேறு விழாக்களாகக் கொண்டாடுவது ஏன்?
மதுராவை ஆண்ட கம்சனின் அரண்மனைச் சிறைச்சாலையில், வசுதேவர் – தேவகி இணையர்க்கு, ஆவணி மாதம், தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்ததாக பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறைச்சாலையில் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது.
சிறைச்சாலை என்ற கொடிய இடத்தில் கிருஷ்ணர் பிறந்தாலும், அவரின் பிறப்பு இறைப் பிறப்பு என்ற கண்ணோட்டத்தில் உலகில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கோகுலாஷ்டமி நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
அதே வேளையில் கம்சனிடமிருந்து கிருஷ்ணரைக் காப்பதற்காக, கிருஷ்ணர் பிறந்த இரவு வேளையில், வசுதேவர் யமுனைக்கு அப்பால் உள்ள பிருந்தாவனத்தில் வாழ்ந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை இணையரிடம் கிருஷ்ணரைக் கொண்டு போய் ஒப்படைத்தார்.
கிருஷ்ணர் பிறந்தது கொடிய சிறையென்றாலும், பிறந்த அடுத்த கணம் சிறையிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பிருந்தாவன மக்கள் கிருஷ்ணரைப் பிருந்தாவனத்தை ஆளப் பிறந்த அரசனாகவே நினைத்து பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடிய நாளை கிருஷ்ணஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா உலகில் வாழும் அனைத்துப் பக்தர்களின் வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாக இருக்கிறது, சிறையில் பிறந்த தினத்தை கொண்டாடுவதைக் காட்டிலும், ராஜவாழ்க்கையின் தொடக்கத்தில் கொண்டாடும் நோக்கத்திலும், கிருஷ்ணன் தங்கள் இல்லத்தையும், பிருந்தாவனத்தைப் போன்று வசதி வாய்ப்புடன் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர்.
சிறை என்றால் சோகம், இராஜ வாழ்க்கை என்றால் மகிழ்ச்சி என்ற பொருளில், கிருஷ்ணர் சிறையில் பிறந்த பிறப்பை கோயில்களிலும், கிருஷ்ணரின் பிருந்தாவன வருகையை அனைத்து வீடுகளிலும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாக்களுக்கு இதுதான் வேறுபாடாகும்.