சத்வ குணமுடைய வெள்ளெருக்கு, வெள்ளை அலரி, பிச்சி, சிறு சண்பகம், மந்தாரை, கொக்கரகு, புன்னை, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை, தும்பை இந்த வகையான வெண்ணிற மலர்களை வைகறையிலும், மாலையிலும், இரவிலும் அர்ச்சிப்பவர்கள் பேரானந்தத்தையும், மோட்சத்தையும் அடைவர்.
சிகப்பு நிறம் கொண்ட பாதிரி, செந்தாமரை, பட்டி, செவ்வலரி, செங்கடம்பு, செம்பருத்தி போன்ற ராஜஸ மலர்களை மதிய வேளையில் ராஜஸ காலத்தில் அர்ச்சிப்பவர்கள் போகத்தை அடைவார்கள்.
பொன்னிறம் கொண்ட கொன்றை, சண்பகம், தங்கரளி, ஜவந்தி போன்ற ராஜஸ - தாமஸ மலர்களைக் கொண்டு விடியற்காலையில் அர்ச்சிப்பவர்கள் போக - மோட்சம் இரண்டையும் அடைவார்கள்.
வில்வம், துளசி, மரிக்கொழுந்து, அருகு பச்சை (அருகு துர்க்கை மற்றும் அம்பாளுக்கு விலக்கு) முதலிய ராஜஸ பத்திரங்களால் அர்ச்சிப்பவர்கள் சதுர்வித - சாம, அர்த்த, காம, மோட்ச பலன்களை அடைவார்கள்.
நீல நிறமுள்ள நீலோற்பவத்தால் அர்ச்சித்தவர்கள், வசீகரம், மோகம், இன்பம் ஆகியவற்றை அடைவார்கள். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த தளிர்கள் வில்வமும், துளசியும் ஆகும்.திங்கட்கிழமை பறித்த வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது. திங்கள் கிழமையன்று நாம் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. நீல நிறம் கொண்ட வேறு எந்த மலர்களும் பூசைக்குத் தகுதியற்றவை.
கோங்கு பூவில் சரஸ்வதியும், அலரிப் பூவில் பிரம்மாவும், வன்னி பத்ரத்தில் அக்கினியும், நந்தியாவட்டத்தில் நந்தித்தேவரும், புன்னைப் பூவில் வாயுவும், எருக்கில் சூரியனும், செண்பகத்தில் செவ்வேளும், வில்வத்தில் லட்சுமியும், கொக்கரகு பூவில் விஷ்ணுவும், மாவிலங்கில் வருணனும், மகிழம்பூவில் சயசையும், வாகைப்பூவில் நிருருதியும், சாதிப்பூவில் ஈசானனும், செங்கழுநீர்ப் பூவில் பரிதியும், குமுதப் பூவில் திங்களும், மந்தாரப் பூவில் இந்திரனும், ஊமத்தம் பூவில் குபேரனும், தாமரைப் பூவில் சிவபெருமானும், நீலோற்பவத்திலும், வாசனை மிகுந்த பூக்களிலும் உமாதேவியரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த மலர்களால் பூஜிப்பவர்கள் சகல போகத்தையும், பெருஞ் செல்வங்களையும் பெறுவார்கள்.
அட்சதை விரோதிகளின் பயத்தை நிவர்த்தி செய்யும். அருகு சகோதர வததோசத்தையும், கொன்றை தாயாருக்குச் செய்த கொடுமையையும், வெள்ளெருக்குப் பூ பரஸ்தீரி மன தோசத்தையும், நீலோற்பவம் வாக்கினால் ஏற்பட்ட தோசத்தையும், குங்குமப்பூ ந்வக்கிரக தோசத்தையும், வில்வம் பொய் சொன்ன தோசத்தையும், கத்தரிப் பத்ரம் குஷ்ட ரோகத்தையும், துளசி வறுமையையும், தும்பை கோஹத்தி தோசத்தையும், நெய்தல் பூவும், நெல்லி பத்ரமும், ரோகங்கள் நிவர்த்தியும் கொண்டவை. இம்மலர்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சிப்பதால் மேற்கண்ட தோசங்கள் அனைத்தும் நீங்கும்.