சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் அனைத்துச் செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும், இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள்
1. நிறை குடம் (நீர் நிறைந்த குடம்)
2. சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையார் சிலை.
3. நெல் அல்லது பச்சரிசி
4. தலை வாழையிலை
5. முடித் தேங்காய் – 1
6. மாவிலை - 5 அல்லது 7
7. குத்து விளக்கு - 2
8. தேங்காய் எண்ணெய்
9. விளக்குத் திரி
10. விபூதி + கிண்ணம்
11. சந்தணம் + கிண்ணம்
12. குங்குமம் + கிண்ணம்
13. பன்னீர் + செம்பு
14. பலநிறப் பூக்கள்
15. வாழைப்பழம் – ஒரு சீப்பு
16. தேசிக்காய் – 1 உடைப்பதற்கு
17. வெற்றிலை - 3
18. பாக்கு - 3
19. சாம்பிராணி
நிறைகுடம் வைத்தல்
ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன்மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும். அதன்பின் அதன் மீது ஒரு தலைவாழை இலையை, இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். இம்முறை அவ்விடத்திற்குப் பொருந்தாவிட்டால், பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழைஇலையை வைக்கவும்.
அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி, அதன் மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்பக் குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்று வைக்கவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித்தேங்காயை அதன் மேல் வைக்கவும், அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள்.
ஒரு தட்டத்தில் (தட்டில்) வாழைப்பழச் சீப்பு ஒன்றும், வெற்றிலைபாக்கு (வெற்றிலை ஒற்றை எண்ணில்), தேசிக்காய் ஒன்றும் வைக்கலாம். கும்பத்தின் இடது பக்கத்தில் வைத்து அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலையையும் வைக்கவும்.
இன்னொரு தட்டத்தில் அல்லது தட்டில் சந்தனம், குங்குமம், பன்னீர்ச்செம்பு, விபூதி வைத்து வலப்பக்கத்தில் வைக்கவும். நிறைகுடத்திற்கு ஒரு மாலையும் போடலாம். அல்லது பூக்களினால் அலங்கரிக்கலாம். குத்து விளக்குகளிற்கும் பூக்கள் வைக்கலாம்.
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முதல் இரண்டு குத்து விளக்குகளிலும் திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ ஒளியேற்றவும். ஒரு தேங்காயை உடைத்து கும்பத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அத்துடன் தூபம் ஏற்றுதல் வேண்டும். ஒன்று அல்லது மூன்று சாம்பிராணிக் குச்சிகளைப் பற்ற வைத்து விடலாம்.