விடைக்கொடி அல்லது நந்திக்கொடி என்பது உலகளாவிய சைவர்களின் உத்தியோகபூர்வமான கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடி ஆகும். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளிலும், இந்துக்களின் சமயம் சார்ந்த நிகழ்வுகள் கொண்டாடப்படும் போதும், இக்கொடியை ஏற்றுவது வழக்கமாக இருக்கின்றது. தற்போது உலகெங்கும் சைவக்கொடியாகப் பட்டொளி வீசும் விடைக்கொடியானது, இலங்கையைச் சேர்ந்த சைவப்பிரமுகர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா என்பவரின் சிந்தனையில் தோன்றியதாகும்.
சைவக்கொடியிலுள்ள பெற்றத்தின் வெண்ணிறம், தூய்மையையும், அதன் பின்னணியாக விளங்கும் செந்நிறம், சிவம் - சைவம் - செம்மை என்பவற்றையும் குறிப்பிடுகின்றன. சைவன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய தன்னலமின்மை, இறைபக்தி, அமைதி என்பனவற்றை, இடபத்தின் திருக்கோலம் விளக்குகின்றது.
சைவர்களின் முழுமுதல் இறைவனான சிவபிரானின் கொடியாகவும், ஊர்தியாகவும், விளங்குவது தர்மத்தின் வடிவான இடபமே என்பது அவர்தம் நம்பிக்கை. வெண்ணிறக் காளையின் சின்னம் பொறித்த இடபக்கொடியை ஏந்தியவரான சிவனை, "ரிஷபத்வஜ" என்று வடமொழி இலக்கியங்கள் துதிக்கின்றன. சிவனது காளைக்கொடியைக் குறிக்கும் வகையில், ஆனேறு, விடை, சே, இடபம், பெற்றம் முதலிய பெயர்களால் அவனது கொடியைப் புகழ்ந்து, தமிழ் இலக்கியங்களும், திருமுறைகளும் பாடுவதைக் காணலாம்.
புறநானூறு, "வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும்" (கடவுள் வாழ்த்து) என்றும், அப்பர், "விடைக்கொடியான்" (தி.4:4:6) என்றும், சம்பந்தர், "ஏறார் கொடி எம் இறை" (தி.2:35:05) என்றும், மணிவாசகர், "சேவார் வெல்கொடிச்சிவன்" (போற்றித்திருவகவல்.4) என்றும் பாடுவது ஓரிரு சான்றுகளாகும்.
தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் கொடியாக விளங்கியதும் இந்த விடைக்கொடியே ஆகும். யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் தங்கள் சின்னமாக விடைக்கொடியையே பயன்படுத்தியுள்ளனர். இலங்கையின் சிங்கள மன்னருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவனும், வீரசைவனுமான கலிங்க மாகன், நந்திக்கொடியையே தன் கொடியாகப் பயன்படுத்தினான் என்பது வரலாறு.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சமயக்கொடி என்பதால், அரசு விழாக்களில் சைவரைப் பிரதிநிதித்துவம் செய்ய, விடைக்கொடியே ஏற்றப்படுகின்றது. புலம்பெயர் தமிழர் வசிக்கும் நாடுகளிலும், சமய நிகழ்வுகள் இடம் பெறும் போதெல்லாம், விடைக்கொடி ஏற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது. உலக சைவப் பேரவையின் ஆதரவில், சிவராத்திரி கொண்டாடப்படும் வாரம் முழுவதும், இலங்கையில் கொடிவாரம் அனுட்டிக்கப்படுவதுடன், சைவர்கள் அனைவரும் விடைக்கொடி தரித்து, அது தொடர்பான விழிப்பூட்டலிலும் ஈடுபடுகின்றனர்.