இந்து சமய வழிபாட்டில் ‘பூசை’ என்ற சொல்லுக்கு ‘இறையன்பில் மலர்தல்’ என்று பொருள். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர் சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். பொதுவாக, பூசையில் பதினாறு வகை செயல்பாடுகள் (உபசாரங்கள்) செய்யப்படவேண்டும் என்று ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை;
1. தியானம் - பூசைக்குரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல்
2. ஆவாகனம் - தியானிக்கப் பட்ட தெய்வத்தை வருமாறு அழைத்தல்
3. ஆசனம் - தெய்வம் அமர இருக்கை அளித்தல்
4. அர்க்கியம் - கைகழுவ நீர் அளித்தல்
5. ஆசமனியம் - பருக நீர் அளித்தல்
6. பாத்யம் - பாதம் கழுவுதல்
7. அபிடேகம் - நீராட்டுதல். விரிவான பூசைகளில் பால், தயிர், தேன், நெய் முதலிய திரவியங்களால் அபிடேகம் செய்யப்படும்.
8. வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
9. ஆபரணம் - அணிகலன்கள் பூட்டுதல்
10. கந்தம் - சந்தனம், குங்குமம் போன்ற நறுமணப் பொருட்களைப் பூசுதல்
11. அர்ச்சனம் - மலர்மாலைகள் சூட்டுதல், நறுமலர்களால் அருச்சித்தல்
12. தூபம் - அகில், சாம்பிராணி, பத்தி போன்றவற்றால் நறுமணப் புகை காட்டுதல்
13. தீபம் - நெய்விளக்கேற்றித் தெய்வத் திருவுருவத்தைச் சுற்றிக் காட்டுதல்
14. நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல். இந்தப் படையலைப் பின்னர் பக்தர்கள் பிரசாதமாக உண்பர்
15. நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்
16. தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்