திருமண் காப்பு என்பது வைணவர்களின் சமயக்குறி. எம்பெருமானின் வியூகநிலைகளை விளக்கும் போது பன்னிரண்டு கிளை வியூகங்கள் குறிப்பிடப்பெற்றன. இந்தப் பன்னிருவரும் திருமாலடியார்களின் திருமேனியில் பன்னிரண்டு இடங்களில் அதிட்டித்திருந்து அவர்களின் திருமேனியைக் காப்பர்.
1. நெற்றியில் - கேசவன்
இவர் தங்கமயமாய் நான்கு புயங்களிலும், நான்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டு சீதேவிப் பிராட்டியாரோடு சேவை சாதிப்பர்.
2. வயிற்றில் - நாராயணன்
இவர் நீலமேக சாமள வண்ணத்தராய் நான்கு புயங்களிலும் நான்கு சங்கங்களைத் தாங்கிக் கொண்டு அம்ருதோத்பவை பிராட்டியாருடன் சேவை பாவித்தருள்வார்.
3. மார்பில் - மாதவன்
இவர் இந்திர நீல இரத்தினத்துடன் நான்கு கைகளிலும் நான்கு கதைகளைத் தாங்கிக் கொண்டு கமலைப் பிராட்டியாராடு காத்தருள்வார்.
4. கண்டத்தில் - கோவிந்தன்
இவர் சந்திரகாந்தியோடு நான்கு விற்களைத் தாங்கிய வண்ணம் சாதுதேவி (சந்திரகோபிநீ பிராட்டியாருடன்) சேவை பாவிப்பார்.
5. வலப்புற வயிற்றில் விஷ்ணு
இவர் தாமரைப் பூந்தாதின் நிறத்தோடு நான்கு கைகைளிலும் நான்கு ஹலாயுதங்களைப் (கலப்பை) பிடித்தவராய் விஷ்ணு பத்தினி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார்.
6. வலப்புறத்தில் - மதுசூதனன்
இவர் தாமரைப் பூ நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு முசலங்களைத் தாங்கிக் கொண்டவராய் வைஷ்ணவி பிராட்டியாருடன் சேவை தந்தருள்வார்.
7. வலப்புறக் கழுத்தில் - திரிவிக்கிரமன்
இவர் அக்கினி காந்தியோடு கட்கங்களை நான்கு புயங்களிலும் தாங்கிக் கொண்டு வராரோகிணி பிராட்டியாருடன் சேவை பாவிப்பார்.
8. இடப்புறவயிற்றில் - வாமனன்
இவர் இளஞாயிறு வண்ணத்துடன் நான்கு கைகளிலும் வச்சிராயுதங்களைத் தாங்கியவராய் அரிப்பிரியை பிராட்டியாருடன் கருணை செய்வார்.
9. இடப்புயத்தில் - சிரீதரன்
இவர் தாமரையின் நிறத்தோடு நான்கு கைகளிலும் நான்கு வாள்களைக் கொண்டு சாரங்கணி பிராட்டியாருடன் சேவையளிப்பார்.
10. இடப்புறக் கழுத்தில் - இருடிகேசன்
இவர் மின்னல் நிறத்துடன் நான்கு திருக்கைகளிலும் நான்கு உழலைத் தடிகளைத் தாங்கிய வண்ணம் தேவதேவி பிராட்டியாருடன் தயை செய்தருளிப் பொலிவார்.
11. முதுகடியில் - பதுமநாபன்
இவர் சூரிய ஒளியுடன் நான்கு கைகளிலும், நான்கு பஞ்சாயுதங்களைத் தாங்கிக் கொண்டு மகாலட்சுமி பிராட்டியாருடன் குளிர நோக்கி வாழ்த்துவார்.
12. பிடரியில் - தாமோதரன்
இவர் இந்திர கோபம் போன்ற ஒளியுடன் நான்கு கைகளிலும் நான்கு பாசாயுதங்களைக் கொண்டவராய் சர்வலோகசுந்தரி (சர்வாங்க சுந்தரி) பிராட்டியாரோடு எழுந்தருளியிருந்து காத்தருள்வார்.
இத்திருமண்காப்பு எல்லா வகுப்பார்க்கும் பொதுவானது. இதற்கு நீள அகல உயரம் இடைவெளி முதலிய அளவுகள் உண்டு. இவற்றை ஐந்து விரல்களாலும் தரிக்கலாம். ஒவ்வொரு விரலால் தரிக்கப் பெறுவதற்கும் தனித்தனிப் பலன் சொல்லப் பெற்றுள்ளது.