வைணவச் சமயச் சாத்திரங்களில் புலமை பெற்றவர்கள், வைணவச் சிறப்புடையவர்களாகப் பத்துப் பிரிவினராக வகைப்படுத்தியிருக்கின்றனர்.
1. அத்வேஷிகள்
உலகத் தலைவனான திருமாலையும் தங்களுடைய பார்வையாலும், இரக்கத்தோடு, நினைவாலும், அப்படிப்பட்ட ஸ்பரிசத்தாலும் மச்ச கூர்ம பிராணிகள் தங்களுடைய முட்டைகளை விருத்தி செய்து தங்களைப் போலாக்குதல் போலவே, உலகோரின் எல்லாப் பாவங்களையும் கடைக்கண் நோக்குக் கருணையோடு தொடுதல் ஆகியவற்றால் போக்க நின்ற வைணவர்களையும் வெறுக்காமல் இருப்பவர்கள் இவர்கள்.
2. அநுகூலர்கள்
வாசுதேவனுடைய உற்சவச் சிறப்பிலும், பாகவதர்களுடைய உற்சவத் தொண்டுகளிலும் ஈடுபட்டு இடைவிடாமல் அவர்கட்குத் துணையாக இருப்பவர்கள் இவர்கள்.
3. திருநாமதாரிகள்
நினைத்த மாத்திரத்திலும், நாவினால் உச்சரித்த மாத்திரத்திலும் எல்லாப் பாவங்களையும் நசிப்பிக்க வல்ல ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமத்தைச் சொல்லி திருமண்காப்பைத் தரித்துக் கொண்டிருப்பவர்கள்.
4. சக்ராங்கணபரர்கள்
சங்கம், சக்கரம், ஊர்த்துவ புண்டரம், துளசிமணி, நளினாட்சமாலிகைகளைத் தரித்தவர்களாய், சங்கு சக்கரம் தரியாதவர்களுடைய சரீரங்களையும் பார்க்கக் கூடாதென்று பிரமாணங்களை அறிந்தவர்களாய் இருப்பவர்கள் இவர்கள்.
5. மந்திரபாடிகள்
நினைத்த மாத்திரத்தில் எம்பெருமானின் இணைத்தாமரை அடிகளாகிய பரமபதத்தை நல்கக்கூடிய எட்டெழுத்து மந்திரத்தை இடைவிடாது செபித்துக் கொண்டிருப்பவர்கள்.
6. வைணவர்கள்
சிற்றின்பத்தைத் துச்சமெனக் கருதி எம்பெருமானிடம் ஒன்றையும் விரும்பாமல் அவன் திருவடிகளை அடைவதையேப் பலனாகக் கருதிப் பக்தியை உபாயமாகக் கொண்டு இருப்பவர்கள்.
7. நீவைணவர்கள்
கர்மம், ஞானம், பக்தி முதலான இதர சாதனங்கள், போகங்கள் யாவற்றையும் துறந்து அதனால் துய மனத்துடன் எம்பெருமானிடம் சாதன அறிவின்றிப் பக்தியுடையவர்களாக இருப்பவர்கள்.
8. பிரபந்நர்கள்
எல்லாவற்றிலும் வைத்திருக்கின்ற ஆசையாகிய பற்றையறுத்து “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் கண்ணனே” (திருவாய் 671) என்று கொண்டு எல்லாப் பாசங்களையும் அவன் திருவடிகளில் வைத்திருப்பவர்கள் இவர்கள்.
9. ஏகாந்திகள்
எம்பெருமானை தவிர, இதர தேவதைகளையும் இதர விஷயங்களையும், பக்தியை உபாயமாகக் கருதுவதையும் துறந்து அவன் திருவடிகளையே சாதனமாகக் கருதி “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர்கைம் மாறுநானொன் றிலேன் என தாவியும் உனதே” (திருவாய் 5.7:10) என்றவாறு எல்லாப் பாரத்தையும் அவன்மீது போட்டிருப்பவர்கள்.
10. பரமைகாந்திகள்
முன் சொன்னவர்களைப் போலவே யாவற்றையும் விட்டுக் கண்ணனையே உபாயமாகக் கொண்டு அவனே சுவாமி என்றும், தம்மை அவனுடைய சொத்தென்றும் நினைத்து அதனாலே சொத்துக்குடையவனான சுவாமி அவன் விருப்பப்படி செய்து கொள்ளக் கடவனென்று தமக்கொரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பவர்கள்.