இந்து சமயத்தின் சில சாதியினர் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வழியே உடலின் குறுக்கே அணியும் மூன்று பிரிகளைக்கொண்ட பருத்தி நூலாலான மாலையினை முப்புரிநூல் (பூணூல்) எனப்படுகிறது. இம்முப்புரி நூலில் நூல்களை இணைக்கும் முடிச்சில் மஞ்சள் தடவி இருக்கும். பூணூலில் இருக்கும் மூன்று புரிகள், காயத்திரி (மனம்), சரசுவதி (வாக்கு), சாவித்திரி (செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவர் மனம், வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறார்.
பூணூல் அணியும் சாதியினருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்குக்கு உபநயனம் என்று பெயர். இந்த நேரத்தில் உபநயனச் சடங்கு செய்பவர், சிறுவர்களுக்கு வாழ்வின் இரகசியம் எனக் கருதும் காயத்திரி மந்திரத்தை அவனது தந்தை, தாயின் முன்னிலையில், ஓதிக் கற்றுக் கொடுக்கின்றார். இது பிரம்மோபதேசம் என சொல்லப்படுகிறது. உபநயனம் செய்து கொள்ளும் சிறுவர் அரச மரக் குச்சியை ஏந்தி தனது பிரம்மச்சரியத்தினை ஏற்பதாகக் கருதப்படுகிறது. எனவே, உபநயனம் செய்விக்கப்பட்ட சிறுவன் பிரம்மச்சாரி என அழைக்கப்படுகிறான். நாளும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் என கதிரவனுக்கு அதிகாலை, காலை மற்றும் மாலை நேரங்களில் வழிபாடு செய்து காயத்திரி மந்திரம் செபிக்க வேண்டும் என இவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
உபநயனம் செய்யும் போது ஓர் நூல்பிரியே அணிவிக்கப்படுகிறது. பின்னர், திருமணத்தின் போது இரண்டாவதும், குழந்தைப் பேற்றுக்குப் பின் மூன்றாவதும் அணியப்படுகிறது. உலகில் தனது கடமைகளை அவனுக்கு நினைவுறுத்திய வண்ணம் இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது.
பிரம்மச்சாரியாக இருக்கும் போது, தனக்கென வேண்டுதல் செய்ய, கல்வியறிவு பெற ஒரு பூணூல் அணிகிறார்கள். ஒரு பூணுல் என்பது மூன்று இழைகளையுடையது. திருமணமான பிறகு, தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுதல் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் அணிகிறார்கள். இரு பூணூல் என்பது ஆறு இழைகளையுடையது. சிவ தீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுகின்றவர்கள் மட்டும் மூன்று பூணூலை அணிகிறார்கள். இது ஒன்பது இழைகளையுடையதாகும்.
பூணூல் அணிவிக்கப்பட்ட ஒருவர் அதனை தன் வாழ்நாள் முழுவதும் கழற்றாது அணிந்திருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி அவிட்டம் நாளில் பழைய பூணூலைக் களைந்து புதிய பூணூலை அணிய வேண்டும் என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.