அட்டாங்க யோகம்
சைவத்திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்கும் திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். இது ஒன்பது ஆகமங்களின் கருத்தை ஒன்பது தந்திரங்களில் விளக்குகிறது. இதில் மூன்றாம் தந்திரம் விராகமத்தின் சாரம் ஆகும். மூன்றாம் தந்திரத்தில் முதலாவதாக இருப்பது அட்டாங்க யோகம் ஆகும்.
பெயர்க் காரணம்
அட்டம் என்றால் எட்டு என்கிற எண்ணைக் குறிக்கும். அங்கம் என்பதற்கு உறுப்பு என்று பொருள். யோகம் என்பது இறைவனுடன் அறிவால் ஒன்றுதலைக் குறிக்கும். உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபட கடைப்பிடிக்க வேண்டிய எட்டு படிநிலைகளை எடுத்துரைப்பதே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.
எட்டு படி நிலைகள்
அட்டாங்க யோகத்தின் எட்டுபடி நிலைகள்
1. இயமம்
2. நியமம்
3. ஆதனம்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
அட்டாங்க யோகத்தின் பயன்கள்
அட்டாங்க யோகத்தின் பயன்களாக திருமூலர் கீழ்காணும் பயன்களை எடுத்துரைத்துள்ளார்.
இயமம் பயன்
இம்மையில் விரும்பிய பயன் மறுமையில் சுவர்க்கம்
நியமம் பயன்
சிவனிடம் அன்பு பூண்டு அவனது புகழையே கூறிச் சிந்தித்திருக்கும் நியமம் தவறாதவர்கள். முனிவர் குழாம் முழ்வதும் சுவர்க்க லோகத்தே முன் வந்து எதிர்கொள்ள ஒளிமயமான அவ்வுலகத்தை அடைவர். சிவபெருமான் ஆணையால் மால், அயன் முதலான தேவர்கள் திருவஞ்சைக்களம் வந்து சுந்தரரை வணங்கி வெள்ளானையில் ஏற்றிச் சிவலோகம் சென்றதை இங்கு நினைவு கூறலாம். சுந்தரர் தாம் பெற்ற இப்பேற்றினைத் திருநொடித்தான் மலைப் பதிகத்தில் பக்தியுடன் கூறுவது படித்துப் பெரிதும் இன்புறுதற்குரியது.
ஆதனம் பயன்
மத்தளம், குழல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க சிவனருளால் விண்ணவர்க்குத் தலைவராகும் பேற்றை அடைவர்.
பிராணாயாமம் பயன்
தேவர்கள் அனைவரும் தம்மை எதிர்கொண்டு அழைக்கக் கயிலையை அடைந்து இன்பம் துய்ப்பர்.
பிரத்தியாகாரம் பயன்
சிவலோகம் சேர்ந்து சிவனை வணங்கும் பேறு பெறுதல்
தாரணை பயன்
தான் எய்தி நின்ற உலகத்தேயன்றி அதற்குக் கீழுள்ள உலகங்களிலும் வியாபகம் உடையவர் ஆவர்.
தியானம் பயன்
தியானிக்கப்பட்ட கடவுளது உலகத்தில் இருந்து இன்பம் நுகர்தல்
சமாதி பயன்
மறுமையில் தான் தியானித்த பொருளோடு ஒப்ப நிற்றல்.
டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய சைவ சமயக் கட்டுரைகள் (தொகுதி 3) நூலிலிருந்து
தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.