'கைம்மான மழகளிற்றை' (பெரி. திரு.581)
மங்கை மன்னனின் மணிவார்த்தை ஒரு யானை - கையையும் கால்களையும் படுத்துக்கொண்டு கிடப்பது போலத் திருவரங்கப் பெருமான் அறிதுயில் கொண்டு பள்ளியில் கிடக்கும் கோலத்தில் ஈடுபட்டுச் சொல்லுகின்றபடியாகும் இது.
‘தென்னானாய் வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” (திருநெடுந் 10)
என்று மீண்டும் அருளிச் செய்வர் இவ்வாழ்வார்.
‘என்ஆனை என்னப்பன் எம்பெருமான்’ (திருவாய். 3.9:1)
என்றார் சடகோபர்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பலவிதமாக ஒப்புமை உண்டு.
1. யானையை எத்தனை தடவைப் பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப்போல் பரமானந்தத்தைத் தரும்; எம்பெருமானும் “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆரா அமுதமே" (திருவாய் 25:4) என்று இருப்பான்.
2. யானை மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானைச் சேர வேண்டியவர்களும் அவன் திருவடியைப் பற்றியேச் சேர வேண்டும்.
3. யானை தன்னைக் கட்டத் தானேக் கயிறு கொடுக்கும். “எட்டினோடிரண்டெனும் கயிற்றினால்” (திருசந்த.83) என்றபடி எம்பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகின்ற கயிற்றை அவன்தானே தந்தருள்வான். “மதிநலம் அருளினன்” (திருவாய் 1.1.1)
4. யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும். எம்பெருமானும் சுத்த பவித்திரனாய், சுத்த சத்து மயனாய் இருந்தாலும், “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்" (திருவிருத்) உடைய நம்போலியருடன் சேரத்திருவுள்ளமாயிருப்பன், வாத்சல்யத்தாலே
5. யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டேப் பிடிக்க வேண்டும். பிராட்டியின் புருஷகாரமின்றி பெருமான் வசப்படான்.
6. யானை பாகனுடைய அநுமதியின்றித் தன்பக்கம் வருபவர்களைத் தள்ளிவிடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” (திருவாய் 4.6.8) என்னும்படி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழியைப் பாகனே அறிவான்; எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்? இராமாநுசருக்கு நம்பிகள் சாதித்த 'ஆறு வார்த்தைகளை' நினைவு கூர்வது.
8. யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல், திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு. எம்பெருமானும் “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ கிடக்க வேண்டா... உன்றன் பைநாகப் பாய்சுருட்டிக்கொள்” என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைப்பிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோமன்றோ?
10. யானைக்கு கை நீளம். எம்பெருமானும் ‘அலம்புரி நெடுந்தடக்கை ஆயன்” (பெரிதிரு. 1.6:2) அன்றோ? “நீண்டவத்தைக் கருமுகிலை” (பெரி. திரு. 252)
11. யானை இறந்த பின்பும் உதவும்: எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய பின்பும் இதிகாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12. யானைக்கு ஒரு கையே உள்ளது. எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ணமுடையவன் (அர்த்தி தார்த்த பரிதான தீட்சிதம்)
13. பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை, எம்பெருமானும் அர்ச்சக பரிசாரர்களுக்கு உதவுவான்.
இங்ஙனம் பல உவமப் பொருத்தங்களைக் கண்டு கொள்ளலாம்.