அன்னபூரணி தேவி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கிறாள். அட்சய திருதியை திருநாள், அன்னபூரணியின் அவதார நன்னாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
“பசித்தவருக்கு உணவு வழங்குபவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் எந்தப் பிறவியிலும் வாட்டாது” என்று தர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் அமைந்துள்ளது. அன்னதானத்தின் இன்றியமையாத இயல்பைப் பற்றிப் பத்மபுராணம் குறிப்பிடுகின்றது. பார்வதியின் அம்சமாகிய அன்னபூரணியைத் தொழும்போது ஈஸ்வரனான சிவனையும், கருத்தில் கொண்டு வழிபட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவு அன்னபூரணி தேவியின் திருவருளாலே நமக்குக் கிடைத்தது. அதற்கு, நாம் மறவாமல் அவளுக்கு நன்றி செலுத்திட வேண்டும். உலக வாழ்க்கைக்கு அன்னையும் தந்தையும் ஆகிய பார்வதி சிவனுக்கு மனமுருகி பக்தியும் நன்றியும் செலுத்தும் வகையில் ஆதிசங்கராச்சாரியர் இயற்றிய அன்னபூரணி ஸ்தோத்திரம் இருக்கின்றது. அந்த ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகம் உணவு உட்கொள்வதற்கு முன்னர் செப்பிக்கவேண்டிய முக்கிய மந்திரமாக அமைந்துள்ளது.
“ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே
ஷங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி”
இதன் பொருள் :
அன்னபூரணி தேவியே, எப்போதும் நிறைவானவளே. சங்கரனாகிய சிவபெருமானுக்கு உயிரானவளே. எங்களுக்கு (எல்லா மனிதர்களுக்கும்) ஆன்மிக அறிவாற்றல், மனத்தெளிவு, நற்பேறு, ஆன்மிக ஈடேற்றம் ஆகியவற்றைப் பிச்சையாகத் தந்தருள்வாய் பார்வதித் தாயே.
கண்களை மூடிக் கொண்டு, “அன்னபூரணித் தாயே. இன்று உன் திருவருளால் எனக்கு உணவு கிடைத்துள்ளது. இதுபோல எல்லா உயிர்களுக்கும் நிறைவாக உணவு கிடைக்க வேண்டும். சிவன் சக்தியின் பிள்ளைகளாகிய எங்களை நீ எப்போதும் எந்தக் குறையும் இல்லாமல் காத்தருள்வாயாக” என்றும் பிரார்த்தனை செய்யலாம்.
அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்) :
“உணவை அவமதிக்க கூடாது. உணவை வீணடிக்க கூடாது. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும். உணவு தேவைபடுபவருக்கு அது மறுக்கப்படக் கூடாது. இதுவே அன்ன நியதி” (யஜுர்வேதம், தைத்திரீய உபநிடதம் 3-7)
1. உணவை வீணாக்க கூடாது
பசித்த போதுதான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே, போதுமான அளவு உணவைத் தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
2. உணவை பகிர்ந்து உண்ண வேண்டும்
நமக்குக் கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்குக் கொடுக்கலாம்.
3. அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது
ஒருவர் அன்போடு நமக்குக் கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூற வேண்டும். பிறகு, அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ண வேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை.
4. ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம்
ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. உணவை வீணாக்கக் கூடாது என்ற நிலையில், ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல், நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கி வீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.
5. புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்
புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீகக் குணங்களை முடக்கி, மெல்ல மெல்ல மிருகக் குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு, நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளைக் குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்க நெறியாகும். மற்றபடி இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளைக் குறைத்துக் கொண்டு, தாவர உணவுகளை மிகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்குப் புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால்தான் நம் முன்னோர்கள் வெள்ளி விரதம், புரட்டாசி விரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களில் விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.