சைவ சமயக் கோட்பாடுகளில், சுத்தத் தத்துவங்கள் என்பது ஐந்து வகைப்படும்.
1. சிவத்தத்துவம்
முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.
2. சத்தித்தத்துவம்
இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவத்தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியாச் சத்தியால் இது விரிவடைக எனப் பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில், அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியாச் சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.
3. சதாசிவத் தத்துவம்
இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தித் தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியாச் சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞானச்சத்தியும், கிரியாச் சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.
4. ஈசுரத் தத்துவம்
ஞானச் சத்தியையும் கிரியாச் சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன், பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவத் தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியாச் சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான். அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி, நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியாச் சத்தி மிகுந்தும் ஞானச் சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.
5. சுத்த வித்தியாத் தத்துவம்
கிரியாச் சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன், பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுரத் தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞானச் சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்) ஞானச் சத்தி மிகுந்தும் கிரியாச் சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சாச் சத்தி என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞானச் சத்தியும் கிரியாச் சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.