இறைவனின் திருவருளாக நிற்கும் மந்திரம், என்றும் அழியாத ‘நமசிவய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். அதன் பொருள்:
ந - இறைவனது மறைப்பாற்றல் - திரோதன சக்தி
ம - மும்மலங்கள் - ஆணவ மலம்
சி - இறைவன் சிவபெருமான் (பதி)
வ - திருவருள் (சக்தி)
ய - உ.யிர் (ஆன்மா)
தூல பஞ்சாட்சரம்
நமசிவய என்பது தூல பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் உலக இன்பங்களைப் பெறலாம். இறைவனின் மறைப்புச் சக்தியால் மும்மலங்களும் நீங்கி சிவபெருமானின் திருவருளால் உயிர்கள் உய்வு பெறும்.
சூக்கும பஞ்சாட்சரம்
சிவயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் முத்திப்பேறு கிட்டும். சிவபெருமான் திருவருளால் ஆன்மா, இறைவனின் மறைப்புச் சக்தியால் மலம் நீங்கப் பெற்று உய்வு பெறும்.
சிவஞானம் பெற
உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு, ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம், மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா, அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும். இதுவே, சிவஞானம் பெறுவதற்கு உதவும்.