சைவ சமயத்தில், திருக்கோயில் வழிபாட்டு முறை குறித்து இங்கு கேள்வி - பதில்களாகத் தரப்பட்டிருக்கின்றன.
திருக்கோயிலுக்கு எப்படிச் செல்தல் வேண்டும்?
* குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் விளக்கு, புஷ்பம் போன்ற வழிபாட்டுப் பொருள்களை ஏந்திச் செல்லல் வேண்டும். வழிபட்டுப் பொருட்களை இடுப்புக்கு மேல் தூய்மையாக ஏந்திச் செல்லவேண்டும்.
திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் என்ன செய்தல் வேண்டும்?
* தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ் பாடிக் கொண்டு உள்ளே செல்லுதல் வேண்டும்.
திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் என்ன செய்தல் வேண்டும்?
* பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும், மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திசையில் தலை வைத்து வணங்க வேண்டும்?
* வடக்கேத் தலை வைத்து வணங்க வேண்டும்.
தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும், வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திசையில் தலை வைத்து வணங்க வேண்டும்?
* கிழக்கேத் தலை வைத்து வணங்க வேண்டும்.
எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
* கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
* தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல் வேண்டும்.
பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
* தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புகளும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல் வேண்டும்.
எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
* மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
விழுந்து வணங்கிய பின் என்ன செய்தல் வேண்டும்?
* திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
* இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
* முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு, அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷிணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.
விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
* முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும், நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
* இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோக் குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
எந்தக் காலத்தில் தரிசனம் செய்தல் கூடாது?
* திரையிட்டிருக்கும் நேரம், அமுது செய்வித்தல் காலங்களில் தரிசனம் செய்தல் கூடாது.
திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
* உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால், இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
வழிபாடு முடிந்தவுடன் என்ன செய்தல் வேண்டும்?
* சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில், கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும். சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்துப் பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே, அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம் என்பதால் சண்டேசுரர் வழிபாட்டில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
சண்டேசர் வழிபாட்டின் பின் என்ன செய்தல் வேண்டும்?
கொடிமரம் முன்னர் சென்று, விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரைக் கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
* ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்துக் கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்துக் கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கேச் செல்லுதல் முதலியவைகளாம்.
சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
* விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்க வேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன், நந்தி தேவரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.
பரிவார தேவர்கள் யார்?
* இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமும் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்க வேண்டும்.