வரம் (பலன்) தருவதால் அது தாவரம் எனப்பட்டது. விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர். நாம் நடக்கும் பாதையில் இருக்கும் அருகு முதல் ஆண்டவன் சந்நிதிக்குப் பின்புறம் முளைத்தெழும் மரங்கள் வரை அனைத்துமே தெய்வாம்சம் நிறைந்தவைதான் என்று விருட்ச சிந்தாமணி சொல்கிறது. சில மரங்கள் தனித்தன்மை கொண்டவை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு சில மரங்கள் தரும் பலன்களைப் பற்றி இந்து சமயம் தரும் தகவல்களைப் பார்ப்போம்.
அசோக மரம்
அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
அத்திமரம்
அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீகக் குணமுடையவை. மனசாந்தியைக் கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் பலன்கள் எளிதாகக் கைகூடும்.
அரசமரம்
அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழேத் தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
அரிசந்தன மரம்
திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டு வர தீமைகள் விலகி, நன்மைகள் வந்து சேரும்.
ஆலமரம்
இம்மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாகக் கைகூடும். இம்மரத்தின் விழுதுகள் ஆண்மைக் குறைவை நீக்கும் தன்மையுடையது.
கருநெல்லி மரம்
திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
குறுந்த மரம்
வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால், இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை.
கொன்றை மரம்
சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
சந்தன மரம்
சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுப காரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீகக் குணத்தையும் கொடுக்கும்.
செண்பக மரம்
சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது தொன்ம நம்பிக்கை.
துளசி
துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா. பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால், வீடுகளின் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்குப் பல மருத்துவக் குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைக் குணமடையச் செய்யும்.
நெல்லி மரம்
நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழேத் தம்பதிகளை அமர வைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்தவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கும்.
பன்னீர் மரம்
இந்தப் பன்னீர் மரம், ‘திருச்செந்தூர் கோயில் மரம்’ என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து, அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்கு வழிபாடுகள் செய்து நற்பலனகளைப் பெறலாம்.
பாரிஜாதம்
அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது தொன்ம நம்பிக்கை. அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பதும் தொன்ம நம்பிக்கை.
பிராய் மரம்
மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு. தொழிற்சாலை வைத்திருப்போர் முன்பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் ஐந்து கி.மீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள். திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக ஒரு மரம் மட்டுமே உயிர் வாழ்கிறது. பிராய் மரங்கள் நிறைந்திருந்ததால் திருப்பராய்த்துறை என்ற பெயர் நிலைத்தது.
பின்னை மரம்
திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது தொன்ம நம்பிக்கை.
பும்ஸிக மரம்
சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்றுபடும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.
புளிய மரம்
புளியமரம் தீய அதிர்வுகளை வெளிப்படுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாக்கக் கூடியவை.
மகிழ மரம்
இந்த மரம், ‘திருவண்ணாமலை கோயில் மரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.
மந்தாரக மரம்
வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது தொன்ம நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.
மருதாணி மரம்
மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் பழங்களைத் தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
மாதுளை மரம்
மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளக்கேற்றி, தம்பதிகளால் வலம் வரத் தம்பதிகளிடையே நெருக்கம் ஏற்படும்.
மாமரம்
மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே, எல்லாவிதமானப் பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது, வீடுகளில் மாவிலைகள் தோரணமாகக் கட்டித் தொங்க விடப்படுகிறது.
ருத்ராட்ச மரம்
ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. ருத்ராட்சக் கொட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
வில்வமரம்
வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனைப் பூஜிக்க அனைத்துப் பாவங்களும் நீங்கும்.
வேப்பமரம்
வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தைச் சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள ஆடைகளைக் கட்டி, மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
ஷர்ப்பகந்தி
இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகளை உடலில் கட்டிக் கொண்டால் பாம்புகள் தீண்டாது.