திருநாவுக்கரசரின் பாடல்களில் 7ஆம் நூற்றாண்டு சிவ வழிபாட்டு முறைகள் விரிவாகக் காணப்பெறுகின்றன. அவற்றுள் சில கீழேக் காட்டப் பெற்றுள்ளன.
* திருக்கோயில் இல்லாத ஊர் காடு போன்றதாகும்.
* திருவெண்ணீறு பூசி வணங்காதவர் பிணத்தோடு ஒப்பர்.
* ஆவுரித்துத் தின்பவரேனும் சிவபெருமானை வணங்கிப் போற்றினால் அவரும் அடியாரே.
* நாள்தோறும் பொழுது புலர்வதன்முன் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.
* பூமாலை சாற்றியும், பாமாலை பாடியும், தலையாரக் கும்பிட்டும் இறைவனை வணங்க வேண்டும்.
* நாமார்க்கும் குடியல்லோம், இறைவனுக்கே அடிமையாவோம்.
* ஒருவரைத் தஞ்சமென்று எண்ணாது இறைவனின் திருவடியினைத் தஞ்சம் அடைய வேண்டும்.
* இறைவன் திருஆடல் கண்டு வழிபடும் பேறு கிடைத்தால், மனிதப் பிறவியும் வேண்டலாம்.
* உடம்பைக் கோயிலாகவும், மனத்தை அடிமையாகவும், அன்பே நெய்யும் பாலாகவும் கொண்டு இறைவனைப் பூசிக்க வேண்டும்.
* இறைவனைத் தலைவனாகக் கொண்டு, உயிர்கள் தங்களைத் தலைவியாகக் கொண்டு காதல் வாழ்வு முறையில் இறைவனைக் கண்டு வழிபடலாம்.
* துன்பத்தைத் தீர்க்கும் மருந்து திருவைந்தெழுத்தாகும்.
* கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் துணையாவது நமசிவாயவே.
* நிலையாமையை உணர்ந்து இறைவனை வழிபட வேண்டும்.
* இறைவன் கனியைக் காட்டிலும், கரும்பைக் காட்டிலும் சிறந்தவன்.