சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்ட கோயில்களில் ஐந்து கோயில்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
1. நகுலேஸ்வரம்
இலங்கையில் ஈழத்தின் வடக்கே அமைந்துள்ளது நகுலேஸ்வரம். யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயம் ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான், இறைவி நகுலாம்பிகை ஆவர். இக்கோயிலின் தல விருட்சம் கல்லால மரம். தீர்த்தம் கீரீமலக்கடலாக இருக்கின்றது. சுதாம என்னும் முனிவரால் சாபம் பெற்ற கீரி முகம் கொண்ட வேடன் இத்தீர்த்தத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். அவனின் கீரி முகம் நீங்கியதால் அவ்வேடன் நகுல முனிவராக மாறினார். இதனால் அவ்விடம் கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் அழைக்கப்படுகின்றது.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப்புரவல்லி குதிரை முகத்துடனும், குன்ம நோயுடனும் இருந்தார். சந்நியாசி ஒருவரின் அறிவுறுத்தலின் படி கீரிமலையில் வந்திறங்கிய இளவரசி, அங்கிருந்த நகுல முனிவரின் ஆலோசனையைப் பெற்று, அத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு குதிரை முகம் நீங்கினார். அவளுக்கிருந்த குன்ம நோயும் மாறியது. தற்போது நகுலேஸ்வரம் முன்னோர் (பிதுர்) கடன்களை கழிக்கும் சிறந்த சிவத்தலமாக விளங்குகின்றது.
2. திருக்கேதீஸ்வரம்
இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில், தேவாரம் பாடப்பெற்ற இரண்டு தலங்களில் ஒன்றாகும். ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். இங்குள்ள இறைவன் பெயர் கேதீஸ்வரநாதர், இறைவி கௌரியம்மை. இங்குள்ள தீர்த்தம் பாலாவி, விருட்சம் வன்னிமரம் ஆகும். இங்கு உள்ள இறைவனை, நாகர்கள் வழிபட்டமையால் இவருக்கு நாகநாதர் என்ற பெயருமுண்டு.
இராமர் இராவணனை வென்று அயோத்திக்குச் செல்லும் வழியில் திருக்கேதீச்சரப் பெருமானை வழிபட்டுச் சென்றார் என்றும், அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் பொருட்டு இலங்கையை அடைந்த பொழுது, திருக்கேதீச்சரம் வந்து வழிபட்டான் என்றும் கூறப்படுகின்றது.
சோழர் ஆட்சியில் இவ்வாலயமானது ‘இராஜராஜேஸ்வரர் மகாதேவன் கோயில்” என்று போற்றப்பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இவ்வாலயம் இடிக்கப்பட்டு அழிவுற்றது. அழிவுற்றிருந்த இக்கோயிலை புதுப்பிக்கும் முயற்சியில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஈடுபட்டார். இவரின் பல்வேறு முயற்சிகளினால் இவ்வாலயமானது மீண்டும் புதிதாகக் கட்டி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இக்கோயிலின் வருடாந்த மஹோற்சவம் வைகாசி மாதத்தில் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது, ஐந்து சித்திரத்தேர்கள் இழுக்கப்படுகின்றன. மாசி மாத மகாசிவராத்திரியானது இங்கு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. அன்றைய நாளில் சிவனடியார்கள் பலரும் இங்கு வந்து பாலாவியில் நீராடி இறைவனை வழிபடுவர். இங்கு சிவனடியார் பாலாவியில் நீராடித் தீர்த்தத்தைக் குடங்களில் நிரப்பி வரிசையான தீர்த்தக் காவடி எடுக்கும், ‘தீர்த்தக் காவடி எடுத்தல்” என்பது சிறப்பான ஒன்றாக இருக்கிறது.
இத்தலத்தில் அமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி, இறுதிக்கடன் புரிவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதுடன், இத்தீர்த்தத்தில் நீராடுவோருக்கு பிரம்மகத்தி தோசம் நீங்கும் என்பதும் தொன்ம நம்பிக்கை.
3. திருக்கோணேஸ்வரம்
இலங்கையின் திருகோணமலை கடற்கரையில் வானுயர்ந்து நிற்கிறது கோணமாமலை. இக்கோணமலை உச்சியில் கோணேசர் கோயில் அமைந்திருக்கிறது. இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் பெரும் புகழை ஈட்டியிருந்த ஆலயம் இதுவாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இக்கோயில் மீது பல பாடல்களை பாடியுள்ளார். அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் இக்கோயிலைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோயிலின் சிறப்பை, தட்சிண கைலாச புராணம், திருக்கோணாச்சர புராணம் என்பன விரிவாக எடுத்துக் கூறுகின்றன. இத்தலத்தில் இறைவன் கோணேஸ்வரர், இறைவி மாதுமையாள். இங்குள்ள தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. தலவிருட்சமாக, கல்லால மரம் விளங்குகின்றது.
இக்கோயிலின் மஹோற்சவப் பெருவிழாவானது பங்குனி உத்தர தினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. மஹோற்சவ நிறைவைக் குறிக்கின்ற பூங்காவனத் திருவிழாவும், தெப்ப உற்சவமும் இக்கோயிலில் பெரும் சிறப்புக்குரியவையாகும். சிவராத்திரி நாளிற்கு முந்தைய பதினைந்து நாட்களும், இக்கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
4. முன்னேஸ்வரம்
இலங்கையிலுள்ள சிவன் கோயில்களில் காலத்தால் முற்பட்ட கோயில் இது. இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் சிலாபம் என்னும் ஊரில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் முன்னைநாதப் பெருமான், இறைவி வடிவாம்பிகை அம்பாள். இது ஒரு சிவத்தலமாக இருப்பினும் சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இக்கோயிலில் வருடத்தில் இரு முறை மஹோற்சவம் நடைபெறும். மேலும், வடிவாம்பிகை உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அத்துடன் நவராத்திரி விழாவும் பக்தோற்சவ விழாவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஆண்டுதோறும் ஆவணி மாதப் பௌர்ணமி தினத்தை தீர்த்தோற்சவமாகக்கொண்டு இருபத்தேழு நாட்கள் முன்னைநாதப் பெருமானின் உற்சவம் நடைபெறும். இக்கோயிலில் இருக்கும் அன்னை வடிவாம்பிகை அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகி அருட்சக்தி மிக்கவளாகத் திகழ்கின்றாள்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமபிரான், தன்னை எதிர்த்த சிவபக்தனான இராவணனை அழித்தார். இதனால் ஏற்பட்ட தோசம் நீங்குவதற்காக இத்தலத்திலே சிவலிங்கம் அமைத்துப் பூசை செய்து தனது பிரம்மகத்தி தோசத்தினை நீக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன.
5. தொண்டீஸ்வரம்
இது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இன்று அழிக்கப்பட்டு விஷ்ணு ஆலயமாக மாற்றப்பட்டு விட்டது.