இந்துக்களின் நம்பிக்கையின் படி இந்தியாவிலுள்ள ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவை எனப்படுகின்றன. முக்தி தரும் ஏழு நகரங்கள் அல்லது ஸப்த மோட்சபுரிகள் என்று அழைக்கப்படும் இந்த ஏழு புனிதத் தலங்களில் நீராடி, அங்கிருக்கும் இறைவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
1. காசி அல்லது வாரணாசி
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கைக்கரையில் அமைந்த பண்டைய புனித நகரம். இதனை காசி என்றும் வாரணாசி என்றும் அழைப்பர். வாரணாசியில் அமைந்த ஜோதிச் சிவலிங்கம் 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாகும். வருணா ஆறும், அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால் இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு பாயும் புனித ஆறான கங்கையில் நீராடுவதால் அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது தொன்ம நம்பிக்கை.
2. அயோத்தி
உத்தரப்பிரதேச மாநிலம், ஸாபாத் மாவட்டத்தில் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இராமர் பிறந்த இடமான அயோத்தி. இங்குள்ள சரயு ஆற்றங்கரையில் நீராடி இராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை.
3. காஞ்சிபுரம்
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுர நகரம், கோயில்களின் நகரம் எனப் புகழ் பெற்றது. இங்கேயிருக்கும் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் என்பன புகழ் பெற்றன. இங்கு வழிபடுவதால் முக்தி பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை.
4. மதுரா
உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் நீராடி, கிருஷ்ணரை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை.
5. துவாரகை
குஜராத் மாநிலத்தில் கிருஷ்ணர் உருவாக்கிய நகரமாகக் கருதப்படும் துவாரகை நகர் இருக்கிறது. துவாரகை என்றால் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். இந்நகரிலுள்ள கிருஷ்ணர் கோயிலில் வழிபட்டால் முக்தி பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை.
6. உஜ்ஜைனி
மத்திய இந்தியாவின் மால்லாப் பகுதியில் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளா என்னும் விழா நடைபெறும் இக்கோயில் சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கிருக்கும் மகாகாளேஸ்வர ஜோதி லிங்கத்தை வழிபட்டால் முக்தி பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை.
7. ஹரித்வார்
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் வழிபட்டால் முக்தி பெறலாம் என்பது தொன்ம நம்பிக்கை. இந்தி மொழியில் ஹரித்வார் என்பது ஹரியின் துவாரம் அல்லது கடவுளின் வழி என்று பொருள். அதாவது, ஹரி என்றால் கடவுள். த்வார் என்றால் வழி என்று பொருள்.