விழாக்களின் போதும், சுபநிகழ்வுகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். கும்பல் பெருகும் இடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால் காற்று மாசடைகின்றது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகின்றது. காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும், பாக்டீரியாக்களும் பரவி மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கின்றன. மக்கள் வெளிவிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக் கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.
மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி உண்டு. மேலும், மாவிலை முறையாகக் காய்ந்து உலருமேத் தவிர, அழுகுவது கிடையாது.
இதே போன்று, மனித வாழ்க்கையும் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் நிலைத்து நின்று முற்றுப் பெறவேண்டும் என்கிற நம்பிக்கையுடன், மங்களம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகின்றோம்.
தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாகச் செய்யும் ஒரு அலங்கார அமைப்பாக இத்தோரணம் திகழ்கின்றது. இதைத் தென்னங்குருத்தோலை கொண்டு செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சில வேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவார்கள். இது மாவிலைத் தோரணம் எனப்படும்.
தோரணம் பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்.
1. மங்களத் தோரணம்
2. அமங்களத் தோரணம்
1. மங்களத் தோரணம்
சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணம் எனப்படும். இவை மூன்று அல்லது ஐந்து குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலைமேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்க வேண்டும்.
2. அமங்களத் தோரணம்
இறப்பு வீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்களத் தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். குருவிகளின் தலைகீழ் நோக்கியும் வால் மேல் நோக்கியும் இருக்கவேண்டும்.
மாவிலைகட்டுதல்
1. சுபகாரியங்கள்
ஆலயங்களில்நடைபெறும் உற்சவம், விழாக்கள் மற்றும் வீடுகளில், மண்டபங்களில் சுபகாரியங்கள் நடைபெறும் போதும், மாவிலையின் காம்புநுனியை முன்புறமாக வளைத்து, இலையின் முன்பகுதியில் காம்பைக் குத்தி மாவிலைத் தோரணம் தொங்கவிடவேண்டும்.
2. துக்கக்காரியங்கள்
இது வீட்டில் அல்லது மண்டபத்தில் மரணச்சடங்கு நிகழும் போது, செய்ய வேண்டிய முறையாகும். மாவிலையின் காம்பு நுனியைப் பின் பக்கமாக மடித்துக் குத்தித் தொங்கவிட வேண்டும். இது துக்க நிகழ்வுகளுக்கு மட்டுமே உரியதாகும்.