உலகம், உயிர்கள் என்று அனைத்துமே ஒரு மூலப்பொருளில் இருந்தேத் தோன்றியது.
“உலகப்பிலானே எல்லா உலகமுடைய ஒரு மூர்த்தி” திருவாய்மொழி, அதுவே பரப்பிரம்மம் எனப்பட்டது. அது ஆண், பெண் என்ற வேறுபாடு அற்றது. "ஆணல்லன், பெண்ல்லள்" என்றும் திருவாய் மொழி (2-5-10) குறிப்பிடுகிறது. அந்தப் பிரப்பிரம்மமே சிவம் என்று பிறகு சுட்டப்பட்டது. அந்தப் பரப்பிரம்மம் உலக சிருஸ்டியை நினைத்து ஆண், பெண் என்று தன்னையேப் பிறப்பித்தது. "பெண்ணாகி ஆணாய்" என்று திருவாசகம் தெரிவிக்கிறது.
சிவம் என்ற மூலப்பொருள் சிவன் ஆனது. சக்தி பெண் வடிவமாக மாறியது, இந்த நிலையில் சிவத்துள் சக்தியும், சக்தியுள் சிவமும் ஒன்றை ஒன்று மருவி உலகின் படைப்பு ஆரம்பம் ஆனது. இந்த உலகம் முதல் அனைத்துமே சிவ சக்தியின் தத்துவமே ஆகும் (கீதை 14-3-4). சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும், அர்த்த நாரீசுவர வடிவம் சிவனின் ஒரு கூறு. இதனை “மாதொரு பிரான்” என்கிறார் திருவாசகம் மாணிக்கவாசகர் பெருமானார். சிவசக்தியின் தத்துவத்தில் சிவனிடத்தில் சக்தி சமபங்காக அடங்கியுள்ளதாகக் காட்டுகிறது. இதைப் போலவே சக்தி, தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் , சக்திக்குள் சிவம் போலவே, சக்தி தத்துவத்தில் யோகமாயைத் தத்துவம் சக்திக்குள் சிவன் அடங்கிய தத்துவமாக குறிக்கிறது. இதனை யோகமளை என்று குறிப்பது வழக்கம்.
"சிவ" என்ற சொல் சிவனையும், சக்தியையும் குறிக்கும். "சி" என்பது சிவனையும் "வ" என்பது சக்தியையும் குறிக்கும், சி - வலிமையானது, வ - மென்மையானது. சிவ சொரூபம் அனைத்துப் பொருட்களிலும் காணப்படும், நமது சமய ஆலயங்களில் ஒரு நீண்ட வெள்ளைக்கோடும், ஒரு நீண்ட சிவப்புக்கோடும் கலந்தவாறு வர்ணம் பூசியிருப்பதைக் காணலாம் அல்லவா? அது இதன் தத்துவத்தைக் குறிப்பதே ஆகும். சிவம், சக்தி இன்றி உலகமும் உடலும் இல்லை என்பதே இதன் தத்துவம்.
முதலில் தாவம் பற்றி காண்போம், உலகில் ஒரே வடிவத்தில் ஆண் (சிவம்) இயல்பும், பெண் (சக்தி) இயல்பும் இரண்டுமேச் சேர்ந்திருக்கின்றன, ஒரே மலரிலும் ஆண் பாகம்(மகரந்தம்), பெண்பாகம் (சூலகம்) என்று இரண்டுமே கலந்து இருக்கிறது. இவ்விரண்டின் சரிபாதிக் கூட்டுறவால் புதிய விதை உண்டாகிறது. சங்கமங்களுள் ஒவ்வொரு உயிரும், அதனதன் தாய் தந்தையரின் பாதிப்பாதி அம்சத்தைப் பெற்றே உண்டாகிறது. சைத்தன்யம், ஜடம் ஆகிய இரண்டு தத்துவங்களை உடையது. "உயிர்த்தத்துவம் சிவம், உடல் தத்துவம் சக்தி, உயிரும் உடலும் சேர்ந்ததே இயற்கையின் திட்டத்தை அமைக்கின்றன” என்பார் சுவாமி சித்பவானந்தர்.
ஆலயங்களின் சுவர்களில் மட்டும் வெள்ளையும் சிவப்பும் மாறி இருக்கவில்லையா? இல்லங்களில் இடப்படும் கோலங்களில் கூட வெள்ளைக் கோலத்துடன் காவி என்ற சிவப்பும் கலந்துதானே கோலம் போடுகின்றனர். கோலத்தில் முதலில் இடப்படும் புள்ளிகள் சிவதத்துவம் ஆகும். பிறகு இடப்படும் கோலமும், காவியும் சக்தி தத்துவமாகும்.
நம் உடலில் வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் சேர்ந்ததே நமது உடல் இயக்கம், அதுமட்டுமா ஜீவ (சக்தி) பொருள் வெண்ணிறமான சுக்கிலம் என்பட்டன, பெண்மையில் கருப்பையில் உள்ள சுரோணிதம் சிவப்பு நிறம், இவை இணைந்தால் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் பரப்பரும்மம் உண்டாகிறது (தாயின் கருவறையிலும் இதுதானே). இல்லறத்தில் கணவன் மனைவி இணைந்தால் ஒரு தாயின் கர்ப்பக்கிருகத்தில் (கர்ப்பத்தில்) ஆணுமற்ற பெண்ணுமற்ற பரப்பிரம்மம் உண்டாகிறது. பிறகுதான் ஆண் - பெண் என்ற நிலையைப் பெறுகிறது. சிவம் - சக்தி என்ற இரண்டு (இவையின் ) வடிவமே நம் உடலின் உறுப்புகள் ஆகும்.
நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு.
* மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை
* கண் இரண்டு - வலது, இடது
* காது இரண்டு - வலது, இடது
* இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை
* மூக்கு இரண்டு - வலது, இடது
* கன்னம் இரண்டு - வலது, இடது
* வாய் இரண்டு - மேல் வாய், கீழ் வாய்
* பல்வரிசை இரண்டு - மேல் வரிசை, கீழ் வரிசை
* நாக்கு இரண்டு - வெளிநாக்கு, உள்நாக்கு
* தொண்டை குழாய் இரண்டு - உணவுக்குழாய், காற்றுக்குழாய்
* நுரையீரல் இரண்டு - வலது, இடது
* குடல் இரண்டு - பெருங்குடல், சிறுகுடல்
* கால்கள் இரண்டு - வலது, இடது
* தோல் இரண்டு - அகத்தோல், புறத்தோல்
* குருதி - வெள்ளை, சிவப்பு
இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் இருக்கின்றன. வலதுபுறம் சிவபெருமானின் இருப்பிடம். இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம். உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமேச் சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இந்தப் புவியைக் கொஞ்சம் நோக்குவோம். தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும். ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி (சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் பொருள். எனவே, சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும் ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும் என்பது சிவசக்தி தத்துவம்.
நமது சரீரத்தில் தட்பமும் (சக்தியும்) வெப்பமும் (சிவனும்) அமைந்திருக்கின்றன. சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார். சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப் பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" என்கிறது திருவாசம் (7-10)
தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி, வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும். ஆகவே சக்தியும் சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும்.
"எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம், எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும். இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும். ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பல மணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது. அதன் சாரம் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான். அதை நினைத்துப் பார்த்தால் ஒரு சில நிமிட உறவுதான், அந்தச் சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம் இல்லை. ஆனால், அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு, உமி பிரிந்து விட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை. உமியும் முளைப்பதில்லை. உமியின் துணைகொண்டு அரிசி முளையாகிறது.
ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை (சிவத்தை) துணை கொள்வதால் எண் (சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது, மதிப்பு பெரியது. ஆண், பெண் சமம். பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியைக் கொள்வார்கள்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம். சிறிது சிந்தித்துப் பார்த்தால், இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும். அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா? இது கயிலையில் மட்டுமல்ல, காணும் இடம் எங்கும் இயற்கையில் இதேக் காட்சிதான். பகல் - இரவு, இன்பம் - துன்பம், உயர்வு - தாழ்வு, தட்பம் - வெப்பம் என்ற சிவசக்தித் தத்துவமே உலகம் ஆகும்.
சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும் ஒன்றாகவே உள்ள தத்துவத்தைத் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம் மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே, நாமும், சிவ-சக்தியை வழிபட்டுத் தெய்வீகக் குணங்களை கடைப்பிடித்து ஞான (சிவ-சக்தி) நிலையினை அடைவோம்.