அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை;
1. பரநிலை
2. வியூக நிலை
3. விபவ நிலை
4. அந்தர்யாமி நிலை
5. அர்ச்சை நிலை
1. பரநிலை
வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன். பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர் வெளியில் அமைந்துள்ளது. இங்கே மஹாவிஷ்ணு பரவாசுதேவன் என்ற பெயரில் விளங்குகிறார். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷனை இருக்கையாகக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியருடனும், நித்யசூரிகள் என்று அழைக்கப்ப்படும் அமரநிலை அடைந்தவர்களுடனும் விளங்குகிறார். நித்யசூரிகளில் அஷ்ட திக் பாலர்கள் (எண்திசைக்காவலர்கள்), 8 துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்கள்), விஷ்வக்சேனர் முதலியோர் அடங்குவர். மண்ணுலக வாழ்க்கை முடிந்து வைகுண்டம் அடையும் பேறு பெற்றவர்கள் வந்து சேரும் இடம் இதுதான்.
2. வியூக நிலை
தேவர்களின் குறைகேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள். இங்கே பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு,தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.
3. விபவ நிலை
மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள் (தசாவதாரம்). விபவம் என்பது பகவானின் தோற்றங்களைக் குறிக்கும். முதல் இரண்டு நிலைகள் நம்மால் அணுக முடியாதவை. நாம் அணுக முடியாத நிலையில் பகவான் இருப்பதில், நமக்கும் பயனில்லை, அவருக்கும் பயனில்லை. எனவேதான் நம்முடன் நெருக்கமாக இருக்கும் பொருட்டு இவ்வுலகில் அவதரித்தார் விஷ்ணு. “அவதாரம்” என்ற சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு “இறங்கி வருதல்” என்று பொருள். நம்மால் அணுக முடியாத நிலையில் இருக்கும் கடவுள் நம் மீதுள்ள கருணையால் கீழே இறங்கி இவ்வுலகில் தோன்றுகிறார்.
4. அந்தர்யாமி நிலை
அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன். நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை. ஆம். கடவுளைத் தேடி நாம் வெளியே எங்கும் போக வேண்டியதில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான், அந்தராத்மாவாக இருக்கிறார். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும்.
5. அர்ச்சை நிலை
கோவில்களிலும், நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன். இவ்வுலகில் பல திருத்தலங்களில் விக்கிரக வடிவில் இருந்து பகவான் நமக்கு அருள் புரிவதைத்தான் அர்ச்சம் என்ற நிலை குறிக்கிறது. எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலை அர்ச்சம். அவதார காலங்களில் வாழும் வாய்ப்பு இல்லாத நமக்கு பகவானைத் தரிசித்து மகிழும் வாய்ப்பை அர்ச்சம் வழங்குவதால், பகவானின் இந்நிலை அர்ச்சாவதாரம் என்றும் வழங்கப்படுகிறது. மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும் அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.