பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையில் உள்ள காலம் ஆகும். சிலர், சூரிய உதயத்திற்கு 1 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு முன்பாகத் தொடங்கி, 48 நிமிடங்கள் முடியும் வரையுள்ள காலம் என்று வகைப்படுத்துகின்றனர். பிரம்மனுடைய சக்தி தேவியான சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்ம முகூர்த்தம் என்பது தொன்ம நம்பிக்கை.
“சூரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்!” என்கிறது சாத்திரம்.
மேற்கண்ட இந்த சமஸ்கிருத வார்த்தைக்கு, “சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல் செல்வச் செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள்” என்பதுதான்.
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயல்படும் போது, மன நிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்றக் காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதட்பக் குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவதுதான் பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து இறைவனை வேண்டுவது, தியானம் செய்வது, யோகா செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது போன்றவை சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். அது மட்டும் அல்ல, இக்காலத்தில் செய்யப்படும் பூஜைகள் முழுப் பலனை அளிக்க வல்லது.
மேலும், சாத்திரத்தின்படி எந்தெந்தக் கிழமைகளில் எப்படியான பிரம்ம முகூர்த்த வழிபாடுகளை நடத்துவது சிறப்புடையதாக இருக்கும் என்பதை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் அகல் விளக்கு ஏற்றி சத்ய நாராயண பூஜை செய்து, பெருமாளை வழிபட்டு வர பித்ரு தோஷம் தீரும். முன் ஜென்ம கர்ம வினை அகலும், இதனால் பாவம் தொலையும். கிரக தோஷம் தீரும். மங்களம் உண்டாகும்.
திங்கட்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் அகல் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபட, மனம் தெளிவடையும், பயம் நீங்கும், ஞானம் பெருகும்.
செவ்வாய்க்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் பஞ்சலோக விளக்கு ஏற்றி, முருகப்பெருமானை வழிபட்டு, கந்த சஷ்டிக் கவசம் படித்து வர நோய்கள் நீங்கும். வீட்டில் மருத்துவச் செலவுகள் குறையும். கண்பார்வை, நோய், செய்வினைக் கோளாறுகள் அகலும்.
புதன் கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் குத்துவிளக்கு ஏற்றி, துளசி சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு, மகாவிஷ்ணுவை அல்லது குழந்தை கிருஷ்ணரை வழிபட்டு வர குழந்தைப்பேறு ஏற்படும். பெண் பிள்ளைகளே பிறந்து வந்த வீட்டில் கூட, ஆண் குழந்தைக்கு வழி பிறக்கும். கல்வி மேம்படும். கலைஞர்கள் குறிப்பாக வழிபட்டு வர சகல கலைகளும் வெற்றியைப் பெறும்.
வியாழக்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் நெய் அகல் விளக்கு ஏற்றி சித்தர்கள் அல்லது மகான்கள் அல்லது குல தெய்வங்களை வழிபட்டு வர அனைத்து நற்பேறுகளும் கிடைக்கப்பெறும்.
வெள்ளிக்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் வெள்ளி விளக்கு ஏற்றி மகாலட்சுமியைக் கனகதாரா சுலோகம் சொல்லி வழிபட்டு வர வரவு அதிகரிக்கும். அதனால் கடன்கள் அடைபடும். சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகள் மேம்படும். தொழில் அல்லது பணி சிறக்கும். எட்டு லட்சுமிகளும் வீட்டில் குடி கொள்வார்கள். சுக்கிரனின் அருளும் கிடைக்கப்பெறும். சிலருக்கு ஜாதகத்தில் காணப்படும் தரித்திர யோகம் கூட முடிவுக்கு வரும். இதனால் ராஜயோகம் ஏற்படும்.
சனிக்கிழமை
பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் அகல்விளக்கு ஏற்றி ஸ்ரீ ருத்திரம் கேட்டு சிவ பெருமானை வழிபட்டு வர, சனி தோஷம் தீரும். தரித்திரம் தொலையும்.