இராமாயணத்தில் 14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும் என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால் ராமர் சீதை மற்றும் லட்சுமணன் தண்டக வனத்திற்கு வந்து அங்கிருந்த சரபங்க முனிவரைச் சந்தித்தனர்.
அதன் பிறகு சரபங்க முனிவர், சுதீட்சண முனிவரைச் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு தன் உடலை அக்னியில் விட்டு விட்டு பிரம்ம லோகம் சென்று விட்டார்.
ராமர், சீதை மற்றும் லட்சுமணன் என்று மூவரும் சரபங்கர் சொன்னபடி சுதீக்ஷன ரிஷியைப் பார்க்கப் பல வனங்கள், மலைகள் கடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்படிச் செல்லும் வழிகளில் பல முனிவர்கள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது சில முனிவர்கள் ராமரைப் பார்த்து, இந்த வானத்தில் வசித்துக் கொண்டிருக்கும் முனிவர்கள் நாங்கள், அசுரர்களால் அனாதைகள் போலக் குவியல் குவியலாகக் கொல்லப்படுகிறோம். இங்கேப் பாருங்கள், குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் அசுரர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் விழுங்கித் துப்பிய எலும்புகள் இவை. மந்தாகினி ஓடும் நதிக்கரையில் சித்ரகூடத்தின் அருகில் வசிக்கும் அனைவரையும் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கிறார்கள். ராமா, அசுரர்கள் செய்யும் பெரும் நாசத்தை எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்குத் தகுதியானவர். எனவே, உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் வரும் அரக்கர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.
ராமர் முனிவர்களிடம் பேச ஆரம்பித்தார், “முனிவர்களான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையைச் செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடையக் கடமையைச் செய்யவே இந்த வனத்திற்கு வந்துள்ளேன். என் தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, இந்தக் காட்டிற்கு வந்த நான் உங்களுக்குத் தொல்லை தரும் அரக்கர்களைத் தடுப்பேன். உங்களுக்குச் சேவை செய்ய, எனக்குக் கிடைத்த வாய்ப்பு இது. உங்களுக்குச் சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெறும். உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த அரக்கர்களை நான் ஒழிப்பேன். என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் விரைவில் காணப்போகிறீர்கள்” என்று உறுதியளித்து அவர்களிடமிருந்து விடை பெற்றார்.
அதன் பிறகு, ராமரிடம் சீதை பேச ஆரம்பித்தாள்.
“ஒருவனுக்கு திருப்தியே இல்லாத போது மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. திருப்தியே இல்லாதவன் பொய் பேசத் துணிவான். திருப்தியே இல்லாதவன் அடுத்தவர்களின் தாரத்தைக் கூட அபகரிக்க நினைப்பான். திருப்தியே இல்லாதவன் தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலியச் சென்று பகையைக் காட்டுவான். பொய் சொல்வதைக் காட்டிலும் மற்ற இரண்டும் மிகவும் கொடியது. நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அசத்தியம் கிடையவே கிடையாது. அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை. பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை, இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை. நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்தினிக்குத் துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர் சத்தியத்தை மீறாதவர் தகப்பனார் ஆணையை மீறாதவர். உங்களிடம் எப்பொழுதும் தர்மமும் சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது. புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே, இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன். உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் இப்போது உங்களிடம் நேரிடையாகப் பகை இல்லாதவர்களைத் தாக்கும் மூன்றாவது குறை தெரிகிறதே. இந்த வனத்தில் வசிக்கும் முனிவர்களைப் பாதுகாப்பதற்காக அரக்கர்களைக் கொல்வேன் என்று முனிவர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே. நீங்கள் இந்த வனத்தில் அரக்கர்களைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் காரணத்தால் உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்படக் கூடாதே என்று கவலை கொள்கிறேன்”
திருமால் ராமராக அவதரித்தது போல், மகாலட்சுமியே சீதையாக அவதரித்து இருப்பதால் இறைவியின் இந்த குணம் வெளிப்பட்டது.
எலும்புக் குவியலாக முனிவர்களை கொன்று குவித்த அரக்கர்களைக் கொல்லக் கூடாது என்பதற்காகத் தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாகச் சொல்லும் சீதையையை கண்டு சிரித்தார் ராமர்.
சீதையின் குணம் இது என்று அறிந்த ராமர், “தர்மத்தை காப்பது என் கடமை. நானாகவே அரக்கர்களைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. முனிவர்கள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். தர்மத்தின்படி அவர்களைக் காக்கும் பொறுப்பு, சத்ரியனான எனக்கு இருப்பதால் அவ்வாறு வாக்கு கொடுத்தேன். என்னால் வாக்கு கொடுத்து விட்டால் அதனை மீறவே முடியாது” என்று சொல்லியபடியே நடக்க ஆரம்பித்தார்.
ராமர் முனிவர்களை அநியாயமாகக் கொன்று குவித்ததைப் பார்த்ததும் சத்ரியர்களுக்கு உண்டான தர்மத்தின் படி, அரக்கர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்று வாக்கு கொடுத்தார்.
சீதை தாயுள்ளத்துடன் அரக்கர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? அவர்களைத் திருத்தலாமே என்று நினைத்தாள்.
இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணப்பட்டது.
சீதையைப் பார்த்து உன் கண்ணைப் பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டிச் சாப்பிட போகிறேன் என்று 10 மாதங்கள் அரக்கிகள் சூழ்ந்து கொண்டு அவளைத் துன்புறுத்தினர்.
போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், அனுமான் சீதையை அழைக்க வந்த போது, உங்களைக் கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த அரக்கிகளைத் துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களைப் பிடுங்கி ஏறியட்டுமா? என்று கேட்டார்.
அப்போது சீதை தன்னைத் துன்புறுத்திய அரக்கிகளுக்குப் பரிந்து பேசி, அனுமனைச் சமாதானம் செய்து அரக்கிகளுக்கு தீங்கு ஏதும் வராமல் பார்த்துக் கொண்டார்.
பரமாத்மா தர்மத்தை காப்பவர். தர்மம் செய்பவர்களை காப்பதற்காகவும், அதர்மம் செய்பவர்களையும், தர்மத்திற்கு எதிரானவர்களையும் தண்டித்து விடுவார். ஆனால், தாயாருக்குத் தாய்ப் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும், அவனை திருத்துவதற்காகப் பரிந்து பேசும் குணம் உடையவள். பெருமாள் கோவிலில் நேரிடையாகப் பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால் தகப்பனார் போல இருக்கும் பெருமாள், இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் எவை? கெட்ட குணங்கள் எவை? நல்ல செயல்கள் எவை? கெட்ட செயல்கள் எவை? என்று கவனிப்பார். நம்மைப் பார்த்தவுடனேயே, இப்படி அதர்மம் செய்கிறானே, இவனைத் திருத்தத் தண்டனை கொடுத்தால் என்ன? என்று நினைப்பார். ஆனால், நாம் முதலில் தாயாரைப் பார்த்து விட்டு, அதன் பிறகு, பெருமாளைப் பார்க்கச் சென்றால், நாம் செல்வதற்கு முன்பே நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு வேண்டியதை மட்டுமேச் செய்யுங்கள் என்று நமக்காகப் பரிந்துரை செய்து விடுவாள் தாயார். தாயாரைப் பார்த்து விட்டு வருபவர்கள் தவறு தெரிந்தாலும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அருளாசி வழங்குவார் பெருமாள்.
இனி பெருமாள் கோயில்களுப் போனால், முதலில் தாயாரை வணங்குங்கள்...!