1. அன்னமயக் கோசம் (உணவுடம்பு அல்லது பருவுடம்பு)
2. பிராணமயக் கோசம் (காற்று உடம்பு அல்லது வளியுடம்பு)
3. மனோமயக் கோசம் (மனவுடம்பு)
4. விஞ்ஞானமயக் கோசம் (அறிவுடம்பு)
5. ஆனந்தமயக் கோசம் (இன்ப உடம்பு)
என வகுக்கப்பட்டு ஐந்து உடம்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
ஏழு தாதுக்களால் எடுத்தது அன்னமயகோசமாகும். அன்ன சாரத்தினால் பிராணனும் பலமும் அடங்கியிருப்பது பிராணமய கோசமாகும். பிராண பலத்தினால் வந்து தோன்றியிருப்பது மனோமய கோசமாகும். அந்த மனதில் (வித்தை) விஞ்ஞானம் தோன்றுவதினால் ஏற்படுவது விஞ்ஞானமய கோசமாகும். அந்த விஞ்ஞானத்தால் (வித்தையால்) ஆனந்தம் தோன்றும் போது ஆனந்தமய கோசமாகும்.
1. அன்னமயக் கோசம்
தாய் தந்தையர் அருந்திய அன்னத்தினால், ஆண், பெண் இன்ப உறவு சுரப்பிகளான சுக்கில சோணிதங்கள் உண்டாகி அவற்றால் தாயின் உதிரத்தில் கருத்தரித்து, குழந்தை பிறந்து அன்னம் பால் முதலான உணவுகளால் நாள்தோறும் வளர்ந்து தூலமான கை கால்கள் நீண்டு, உடல் அவ்வப்போது மாறுபாடுகள் வளர்ச்சி குன்றல் குறைதல், நலிதல், நசித்தல் முதலான விகாரங்களுக்கு இலக்காகி சப்த தாதுமயமாய் தோன்றும். ஆதலின் இந்த தூலசரீரம் (பருவுடல்) அன்னமயக் கோசம் என வழங்கப்படுகிறது. இது மரணமடைந்தப் பின்பு, அன்னமயமான பிருதிவியில் (மண்ணில்) ஒடுங்கும். இதற்கு இஷ்டமானவை ஜீவாத்ம மனுஷ்யத்வம் முதலான தர்மங்கள்.
2. பிராணமயக் கோசம்
வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம் என்னும் பஞ்சகர்மேந்திரியங்களும், அபானன், உதானன், சமானன், வியானன் என்னும் பஞ்ச பிராணன்களும் சேர்ந்தது பிராணமயக் கோசம், பிராண வாயு முதலான பத்து வித வாயுக்களும் அன்னமயக் கோசத்தில் சஞ்சரிக்கும் போது, பிராணமய கோசத்திற்கும் பரமாத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகும். பரமாத்மாவில் உள்ள சத்து, சித்து, ஆனந்தம் என்னும் குணங்கள் பிராணமயக் கோசத்தில் உண்டாகியிருப்பதால், மனிதன் பிராணன் உடையவனாகிறான். நான் பசியும், தாபமும், ஆசையும், சாமர்த்தியமும், பலமும், வீரதீரமும் உள்ளவன். நான் வாயாடி, ஊமை, முடவன், குருடன் என்னும் இவை போன்றவை பிராணமயக் கோசத்தின் குணங்களாகும். இது உடலில், உச்சி முதல் உள்ளங்கால் வரை எங்கும் அந்தரங்கமாய் வியாபித்து, கண் முதலான இந்திரியங்களுக்குப் பலத்தை உண்டாக்கி அவற்றை நல்வழியிலோ, தீய வழியிலோ நடத்திச் செல்கிறது.
3. மனோமயக் கோசம்
மனதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பஞ்சஞானேந்திரியங்களும் சேர்ந்து சப்தம் முதலான விஷய சங்கல்பத் தர்மங்களைச் செய்யும் போது, மனோமயக் கோசம் என வழங்கப்படும். இதன் விருப்பம், சங்கற்பம் முதலான தர்மங்களாகும். ஆத்மா என்னும் சச்சிதானந்தம் மனோமயக் கோசத்திலும் சேர்ந்திருப்பதால், இந்த மனோமயக் கோசத்திற்கும் ஆத்மாவிற்கும் சேர்க்கை உண்டாகிறது. இது பிராணமயக் கோசத்திற்கு வேறாக இருந்து காமக்குரோதம் முதலானவைகளை உண்டாக்கி, நான், எனது என்னும் விகாரங்களை உடையதாக விளங்குகிறது.
4. விஞ்ஞானமயக் கோசம்
புத்தியோடு ஞானேந்திரியங்களான ஐம்பொறிகளும் சேர்ந்து, அன்னமய, பிராணமய, மனோமயக் கோசங்களோடு கூடி, அந்தக்கரணத்திலுள்ள தியானம் மனம் முதலானவற்றின் விருத்தி எப்போது உண்டாகிறதோ, அப்போது விஞ்ஞானமயக் கோசம் எனப்படும். நான் புத்திசாலி பக்தன், செயலாற்ற வல்லவன், ஆசையற்றவன் என்பன போன்றவையெல்லாம் இந்தக் கோசத்தின் குணங்களாகும். மேற்குறிப்பிட்ட பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் என்னும் மூன்று கோசங்களாலும் சூக்ஷ்ம சரீரம் (நுண்ணுடல்) நிலைத்து நிற்கும்.
5. ஆனந்தமயக் கோசம்
மேற்கூறிய நான்கு கோசங்களும் அஞ்ஞானத்தோடு (அறியாமையோடு) சேர்ந்து நுட்பமான ஆல விதைக்குள் பெரிய ஆலமரம் அடங்கியிருப்பது போல் சொரூப சுகத்தில் தன் காரண ஞானம் அடங்கியிருக்கும் போது, ஆனந்தமயக் கோசம் என வழங்கப்படும். பிரியம், மோதம், பிரமோதம் என்னும் விருத்திகளோடு கூடிய அஞ்ஞானம் முதன்மையாகவுள்ள அந்தக்கரணமாகும். இது பிரியம் என்பது விருப்பமான பொருளைப் பார்த்ததும் உண்டாகும். ஆனந்தம், மோதம் என்பது அப்பொருள் தன் கைக்குக் கிடைத்ததும் உண்டாகும் ஆனந்தம், பிரமோதம் என்பது தன் கைக்குக் கிடைத்த பொருளை, தான் அனுபவித்ததும் உண்டாகும் ஆனந்தம். ஆத்மா சச்சிதானந்தத்தோடு இருப்பதால் ஆனந்தம் தோன்றுகிறது. எனவே ஆனந்தமயக் கோசத்திற்கும், பரமாத்மாவுக்கும் சேர்க்கை உண்டாகிறது. இதற்கு இஷ்டமானவை போகத்துருத்வாதி விகாரங்களாகும்.
இவ்வைந்து கோசங்களோடு ஆத்மா சேர்ந்திருந்தாலும் பஞ்சகோசங்களுக்கு ஆத்மா வேறானதாகும். புளியை அதன் ஓடு மூடிக் கொண்டிருப்பது போல் இவ்வைந்து கோசங்களும் பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் மூடிக்கொண்டு அவற்றைக் காணப்படாமல் செய்வதினால் இவை கோசங்கள் எனப்படுகின்றன.