நான்கு வகையான மனிதர்கள்!
மனிதர்களில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று இந்து சமயப் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
1. உண்டு, உண்டு வகையினர்
2. இல்லை, இல்லை வகையினர்
3. உண்டு, இல்லை வகையினர்
4. இல்லை, உண்டு வகையினர்
உண்டு, உண்டு வகையினர்
இவ்வகையினர் உழைத்துச் செல்வம் சேர்த்த வள்ளல்கள். அவர்களிடம் செல்வம் இருக்கிற காரணத்தால், இம்மையில் அடையக் கூடிய தார்மிகத்திற்குப் புறம்பில்லாத அனைத்து சுகங்களையும் அடைகிறார்கள்.
அதே சமயம், தானதர்மம் செய்து வள்ளல்களாகவும் அவர்கள் இருப்பதால், அந்தப் புண்ணியத்தின் மூலம் அவர்களுக்குச் சொர்க்கமும் கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு உண்டு.
இல்லை, இல்லை வகையினர்
இவ்வகையினர் செல்வமுள்ள கஞ்சப் பிரபுக்கள். அவர்களிடம் செல்வம் இருந்தும், கஞ்சத்தனமும் கூடவே இருப்பதால், இம்மை சுகங்களை அவர்கள் அடைவதில்லை.
தான தர்மம் செய்யாததால், மறுமையிலும் அவர்களுக்கு உயர்ந்த நிலை கிட்டுவதில்லை.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு இல்லை.
உண்டு, இல்லை வகையினர்
இவ்வகையினர் தாசிகள். எந்த தர்ம நியாயத்திற்கும் உட்படாமல் அனைத்து சுகங்களையும் அவர்கள் தேடி அடைகிறார்கள்.
ஆனால், அவர்கள் செய்வது பாவச்செயல் என்பதால், மறுமையில் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை உண்டு; மறுமை இல்லை.
இல்லை, உண்டு வகையினர்
இவ்வகையினர், சந்ந்நியாசிகள், எளிய வாழ்க்கை நடத்தும் தர்மசீலர்கள் போன்றவர்கள். அவர்கள் இந்த உலக சுகபோகங்களைத் தாங்களாகவே விரும்பி நிராகரிக்கிறார்கள்.
ஆனால், தூய தவ வாழ்க்கையின் காரணமாக அவர்களுக்கு மறுமையில் முக்தி கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை இல்லை; மறுமை உண்டு.
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.