திருமாலின் பக்தியில் ஆழ்ந்த ஆழ்வார்கள், திருமாலைப் பற்றியப் பாசுரங்களைப் பாடியுள்ளனர். திருமால் சன்னிதி முன் வந்து நின்று பாசுரங்களை இராகத்துடன் பாடி, அப்பாசுரத்திற்கான கை அபிநயம் பிடித்து, அதற்கான பொருளினையும் கூறுகின்ற மரபு ஆழ்வார்களின் பின்னர், வைணவ நடைமுறையில் தோன்றுகின்றது. இந்நடைமுறைச் சடங்கியல் மரபினை அரையர் சேவை என்று குறிப்பிடுகின்றனர்.
இந்திய மரபு வழியில் கோயில் சார்ந்தே பல ஆடல் கலைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. கதகளி, கூடியாட்டம், கிருஷ்ணராட்டம், பரதநாட்டியம், கைசிக புராண நாடகம் என்ற வகையில் அரையர் சேவையும் தனித்தன்மை வாய்ந்த நாட்டிய உபசார மரபாகும்.
இன்னும் அதற்கான நடைமுறைகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற கோயில் கலை. ‘அரையர் சேவை’ என்பது இலக்கண மரபில் ஒரு பெயர்ச்சொல். அப்பெயர் புனிதத் தன்மை வாய்ந்தாக கருதப்படுகின்றது.
'அரையர்” என்ற சொல் திவ்யப்ரபந்தத்தை விண்ணப்பம் செய்பவர்கள் (அறைபவர்கள்) என்று பொருள்படும். நாலாயிரத் திவ்யப்ரபந்த தீஞ்சுவைப் பாசுரங்களை பெருமாள் சன்னிதியில் அபிநயத்துடன் தாள, ஒலிக்கேற்ப ஆடிப்பாடிக் கொண்டாடுவதால் அவர்களுடைய சேவை, அரையர் சேவை எனப்பட்டது.