இந்து சமயத்தில் வைணவப் பிரிவினர், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாளினை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகின்றனர்.
வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இந்நாளில் திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.
இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து, திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். அதிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குத் திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் கதவு இன்று மட்டுமே திறக்கப்படுகிறது.
சொர்க்க வாசல் என்றழைக்கப்படும் இவ்வாசல் வழியேக் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.
புராணக் கதைகளின்படி திருமால், தனது எதிரிகளாக இருந்த இரு அசுரர்களுக்கு இந்நாளில், வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இவ்வாசல் வழியே பெருமாளின் திருவுருவம் வெளியே உலா வரும் போது, இறைவனைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும், தாங்கள் பெற்ற முக்தி நிலை கிடைக்க வேண்டும் என்று அந்த அசுரர்கள் வரத்தைக் கேட்டுப் பெற்றனர்.
அதன் படியே இந்த வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதுடன், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வும் நடைபெறுகிறது.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "பகல் பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஏகாதசி நாளிலும், உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு துன்பங்கள் அனைத்தும் தீரும் என வைணவர்கள் நம்புகின்றனர்.
விஷ்ணு புராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணா நோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒரு நாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால், வைணவர்களுக்கிடையே இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.