‘கஸ்’ என்றால் ஒளிர்தல் என்று அர்த்தம். இதுவே, காசி என மருவியதாகச் சொல்கின்றனர். நகருக்குத் தெற்கே அஸி நதியும், வட கிழக்குப் பகுதியில் வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் திருத்தலம் வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது.
அருந்ததனா, சுதர்சனா, பிரம்மாவதாரா, சுதர்சனா, ராமநகரா, மாளநி, பூபவதி, காசிபுரா, காசியம்பதி, கேதுமதி என்று காசிக்குப் பல பெயர்கள் உண்டு.
சிவபெருமானும் உமையவளும் திருமணம் முடிந்ததும் காசிக்கு வந்தனர். பிரளய காலத்தில் அழியாமல் இருந்தது காசி. அவர்கள் கால் ஊன்றிய தலம் காசி என்று போற்றப்படுகிறது. காசியில் உயிர் துறப்பவர்களின் செவிகளில், காசி விஸ்வநாதர் பிரணவ மந்திரத்தை ஓதி, மோட்சம் அடையச் செய்கிறார் என்கிறது காசி புராணம்.
‘முந்தைய பிறப்புகளில் எண்ணிக்கையில்லா ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர்களுக்கே இந்தப் பிறவியில் காசிக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்’ என்கிறது சிவமகா புராணம்.
காசி திருத்தலத்தில், பதினோரு சுயம்பு லிங்கங்கள் உள்ளன. தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 46 சிவலிங்கங்கள் உள்ளன. முனிவர்களும் யோகிகளும் 47 சிவலிங்கங்கள் நிறுவியுள்ளனர். நவக்கிரகங்கள் வணங்கி வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் உள்ளன. சிவகணங்கள் 40 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டிருக்கின்றன. சிவனடியார்களும் பக்தர்களும் 295 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டிருக்கின்றனர். இப்படி காசியில் பல கோடி சிவலிங்கங்கள் இருக்கின்றன என்று பிரம்ம வைவர்த்த புராணம் குறிப்பிடுகிறது.
காசிக்கு வந்து கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை மனமுருகி வேண்டுபவர்களுக்கு முக்தி உறுதி என்கிறார்கள் சிவாச்சாரியர்கள்.