வாரணாசி எனப்படும் காசியில் ஓடும் கங்கை ஆற்றில் 87 படித்துறைகள் அமைந்திருக்கின்றன. இப்படித்துறைகளில் மூன்று படித்துறைகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. அவை;
1. மணிகர்ணிகா படித்துறை
2. தச அஷ்வமேத படித்துறை
3. அரிச்சந்திரன் படித்துறை
1. மணிகர்ணிகாப் படித்துறை
மணிகர்ணிகா படித்துறை என்பது வாரணாசியில் ஓடும் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் மிகப் பழமையான படித்துறைகளுள் ஒன்றாகும். வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் இறந்தவர்களது சடலம் எரிக்கப்பட்டால், அவருக்கு வீடுபேறு கிடைப்பது உறுதி என்கிற இந்து சமயத்தினரிடையே பெரும் நம்பிக்கையுள்ளது. எனவே, இப்படித்துறையில் நாள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். திறந்தவெளிச் சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண்பதற்காகப் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
முக்கியமானவர்கள் இறந்த பின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை மிகவும் முக்கியமானது.
இங்குள்ள படித்துறையில் மணிகர்ணிகா என்றழைக்கப்படும் குளம் ஒன்று உள்ளது. பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியைத் (மணிகர்ணிகா) தேடும் போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக சொல்லப்படுகிறது. இவ்விடம் சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு இருக்கும் அம்மனை மணிகர்ணிகா என்றே அழைக்கின்றனர்.
2. தச அஷ்வமேதப் படித்துறை
தச அஸ்வமேத படித்துறை என்பது வாரணாசியில் ஓடும் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் படித்துறைகளில் முதன்மையானதாகும். இப்படித்துறையானது, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்து சமயப் புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அஷ்வமேத யாகம் செய்யும் போது, பத்து குதிரைகளைப் பலியிட்டார் என்றும், மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இப்படித்துறையில் கங்கை ஆறு, அக்னி தேவன், சிவபெருமான், சூரிய தேவன் மற்றும் முழு பிரபஞ்சத்திற்கும், பூசாரிகளால் நாள்தோறும் மாலையில் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் மற்றும் முக்கியமான சமயத் திருவிழாக்களின் போதும் சிறப்பு கங்கை ஆரத்தி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
3. அரிச்சந்திரன் படித்துறை
அரிச்சந்திரன் படித்துறை என்பது வாரணாசியில் ஓடும் கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் படித்துறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்து சமயப் புராணக் கதையில் வரும் அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன் என்பவன், இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்கும் வெட்டியானாகப் பணி செய்தான் என்றும், அதனால் இங்குள்ள படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயர் ஏற்பட்டது என்கின்றனர்.
வாரணாசியில் இந்து சமயத்தவர்களின் இறந்த உடல்கள் எரியூட்டப்படும் மிகப் பிரபலாமான படித்துறைகளில் ஒன்றாக இருக்கிறது. மணிகர்ணிகா படித்துறைக்கு அடுத்து, இப்படித்துறையே இரண்டாவது படித்துறையாக இருக்கிறது.
இப்படித்துறை அருகில் தமிழர்களின் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. காஞ்சி சங்கர மடத்தின் கோயிலும், அதனருகில் பாரதியாரின் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.