காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்பவை ஐம்பெரும்பாவங்கள் எனப்படுகின்றன.
1. காமத் தீட்டு
காமம் என்பது ஆசை. நாம் எந்தப் பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே நினைவாக இருப்போம். அதற்காகவே முயற்சி செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இல்லையென்றால், மனத்தில் எப்பொழுதும் வேதனை ஏற்படும். அப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றார்கள்.
2. குரோதத் தீட்டு
குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு வாழ்க்கை முழுவதும் துன்பம் அனுபவிப்பார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள்பலர். கோபம் எழும் பொழுது, நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமேச் செய்யத் துணிவார்கள். அவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.
3. லோபத் தீட்டு
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநலமே. அப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.
4. மதத் தீட்டு
மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மமதையோடு (கர்வத்தோடு) இருப்பது. எதையும் தானேச் சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவது. அப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர்.
5. மாற்சரியத் தீட்டு
மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது அழிந்து போவார்கள் என்று நினைப்பது. தான் மட்டும் சுகமாக இருக்க வேண்டும், அழியவேக் கூடாது என்பதே எண்ணமாக இருக்கும். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். அப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? அதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர்.
இவை ஐந்தும் மாபெரும் தீயவைகள். இந்தத் தீயவைகளையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீயவைகள் ஆகாது. இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான். நம் உடலில் இருக்கும் சத்து போய்விட்டால், பிணம்தான். பிணம் ஆனபிறகு இறைவனை அடைய முடியாது. சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை. பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். உயிர் எங்கு சென்றது என்பதே யாருக்குமே தெரியாது. சத்து என்னும் உயிரே இறைவன். இதை உணர்ந்து உண்மையைத் தெரிந்து கொண்டால், எல்லாம் நமக்குப் புரியும்.