சாதுர்மாஸ்ய விரதம் என்பது இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், துறவு மேற்கொண்டவர்கள் எனத் தனித்தனியாக இரு வகைப்படுத்தப்படுகிறது.
இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், ஆனி மாதம் துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் துவாதசி நாள் வரையில் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பர்.
துறவு மேற்கொண்டவர்கள், ஆனி மாத பிரதமையில் தொடங்கி, மகாளய அமாவாசைக்கு முன் வரும் முழுநிலவு (பௌர்ணமி) நாள் வரை விரதம் இருப்பர்.
ஆடி மாத முழுநிலவு நாள் முதல் கார்த்திகை மாத முழுநிலவு நாள் வரை தேவர்களும், பகவான் விஷ்ணுவும் யோக நித்திரையில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் செய்யும் இறைவழிபாடு செய்வது மிகவும் பலன் தரக்கூடியது. மேலும், அந்த நான்கு மாதங்கள் மழைக்காலம் என்பதால், பல உயிரினங்கள் இடம் பெயர்ந்து வாழும். அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல், துறவு மேற்கொள்பவர்கள் ஒரே இடத்தில் நான்கு மாதங்களுக்குத் தங்கியிருப்பர்.
சாதுர்மாஸ்ய விரதக் காலத்தில் அவர்கள் செய்யும் வழிபாடுகள், மந்திர ஜபங்கள் உலகம் முழுமைக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியவை. இக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடுகளோடு ஒரு விரத முறையைக் கடைப்பிடிக்கின்றனர். இதற்கு சாதுர்மாஸ்ய விரதம் என்று பெயர்.
சாதுர்மாஸ்ய காலமான நான்கு மாதக் காலத்தில், முதல் மாதம் உணவில் காய், பழங்கள், இரண்டாம் மாதம் பால், மூன்றாம் மாதம் தயிர், நான்காம் மாதம் பருப்பு வகைகள் போன்றவைகளைத் தவிர்ப்பர்.
இந்த விரதம் அனைவருக்குமானது.