நான்மாடக்கூடல்
மதுரையை நான்மாடக்கூடல் என்று சொல்வதுண்டு.
நான்கு மாட வீதிகள் கூடுவதால்தான் மதுரைக்கு அந்தப் பெயர் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஒருமுறை வருண பகவான் கொடிய வயிற்று வலி நோயால் அவதிப்பட்டான்.
தன் நோய் தீரவும், அதே சமயம் சோமசுந்தரரின் திருவிளையாடலைக் காணவும் தீர்மானித்த அவன் பெரும் இடியோசையுடன் பெருமழையைப் பொழிந்து மதுரை மாநகரையே மூழ்கும்படி செய்தான்.
இதனைக் கண்ட பக்தர்கள் இறைவனை வேண்டினார்கள்.
பக்தர்களின் வேண்டுதலைக் கண்ட சோமசுந்தரர் மேகங்களை அழைத்து, “மதுரையின் நான்கு பகுதிகளிலும் மாடங்களாக இருந்து மழையை உள்ளே விடாமல் தடுப்பீர்களாக!” என்று ஆணையிட்டார்.
இறைவன் ஆணைப்படி அந்த மேகங்கள் மதுரையின் நான்குபகுதிகளிலும் மேகங்களாகத் திரண்டு மழையிலிருந்து மதுரையைக் காத்தன.
இதைக் கண்ட வருணபகவான் சோமசுந்தரை வணங்கி நின்றான். அவரும் வருணபகவானின் குற்றத்தை மன்னித்து அவனுடைய வயிற்றுவலியைப் போக்கினார்.
மதுரையை நான்கு மாடங்களால் இறைவன் காத்து அருளியதால் அத்தலம் நான்மாடக்கூடல் என்று ஆனது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.