இந்து சமய வேத சாஸ்திரங்களான உபநிடதங்கள் மனிதனை ஆன்மா என்றும், ஜீவாத்மா என்றும் அழைக்கின்றன. மனிதன், உலகில் சுக துக்க அனுபவங்களைப் பெறுவதற்கு தூல உடல் , நுண்ணுடல் (சூக்கும உடல்), காரண உடல் எனும் மூன்று உடல்களைக் கொண்டுள்ளான்.
தூல உடல் (Gross body or Sthula Sharira)
மனிதனின் தூல உடல் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி எனும் பஞ்சபூதங்களால் ஆனது. கருவில் இடம் பெறுதல் (அஸ்தி), பிறந்த பிறகு வளர்ச்சி அடைதல் (ஜாயதே), வளர்தல் (வர்ததே), இளமை, வாலிபம், முதுமை போன்ற மாறுபாடுகளுக்கு உட்படுதல் (விபரிணமதே), மூப்பின் காரணமாக தளர்ச்சி அடைதல் (அபச்சியதே), இறுதியில் மரணமடைதல் (நாசம்) எனும் ஆறு மாற்றங்களுக்கு (ஷட் விகாரம்) உள்ளாவது. தன்னாலும் பிறராலும் காணக்கூடியது. சுமார் நூறு ஆண்டு கால வாழ்நாள் கொண்டது.
சூக்கும உடல் (Subtle body or Linga Sharira)
மனிதனின் சூக்கும உடல், கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், குதம், குறி ஆகிய ஐந்து கர்மேந்திரியங்கள், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய பஞ்ச பிராணன்கள் மற்றும், மனம் ஆகிய 16 நுண் உடல்களைக் கொண்டது. இச்சூக்கும உடல் பிரளய காலம் வரை வாழ்நாள் கொண்டது.
காரண உடல் (Causal body or Karana Sharira)
இவ்விரண்டு உடல்களுடன் சீவாத்மாவிற்கு காரண உடலும் (காரண சரீரம்) உண்டு. இவ்வுடல் தனி உடல் அல்ல. தூல, சூக்கும உடல்கள் வெளிப்படும் முன் இருக்கின்ற விதை உறக்க கால நிலை போன்றது. எவ்வாறு விதை, மரமாக வெளிப்படுகிறதோ அவ்வாறே காரண உடல், சூக்கும உடலாகவும், தூல உடலாகவும் வெளிப்படுகிறது. பிரளய காலத்தில் சூக்கும உடலும், தூல உடலும் காரண உடலுடன் ஒடுங்கிவிடுகின்றன. விதேக முக்தி நிலையில் மட்டுமே அனைத்து உடல்களும் அழிகின்றன.