மகா வாக்கியங்கள் என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக் (வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும்.
ஒவ்வொரு மகா வாக்கியமும், அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாகக் கருதப்படுகிறது. நான்கு மகா வாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை.
இந்து மதத்தின் அனைத்துத் தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்கள் கருதப்படுகின்றன.
அந்த மகாவாக்கியங்கள்;
1. பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) - "பிரக்ஞையே (அறிவுணர்வே) பிரம்மன்" (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
2. அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) - "இந்த ஆத்மா பிரம்மன்"(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
3. தத் த்வம் அஸி (तत् त्वं असि) - "அது(பிரம்மம்) நீ" (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
4. அஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) - "நான் பிரம்மன்" (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்)
மேலேக் கூறப்பட்டுள்ள பிரம்மன் (ब्रह्मन्), பிற்காலத்தின் படைப்பின் கடவுளாகக் கருதப்படும் நான்முகப் பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டு மொத்தப் படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் பிரம்மனைக் குறிக்கிறது
இந்த நான்கு மகா வாக்கியங்களும் ஆத்மனுக்கும் பிரம்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.
பிரம்மன் படைப்பின் அடிப்படைத் தத்துவம், பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியது. அதே சமய,ம் ஆத்மன் அனைத்து உயிர்களிடத்தும் அறியப்படும் தான் என்ற தத்துவத்தின் மூலாதார உருவகம். ஆத்மன் அழிவற்றது. அதேப் போல் பிரம்மனும் அழிவற்றது.
யோகத்தின் மூலமாகவும், தியானத்தின் மூலமாகவும் ஒருவர் ஆத்மனும் பிரம்மனும் ஒன்று என்பதை அறிய இயலும்.