திருமுழுக்கு வழிபாடு என்பது தெய்வத் திருமேனிகளைப் (சிலை) பூசிக்கும் முறைகளுள் ஒன்றாகும். இது அபிசேகம் என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது.
பால், புனித நீர், நெய், தயிர், தேன், சந்தனம், எண்ணெய், மஞ்சள், இளநீர், மலர்கள், சாதம், திருநீறு உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு திருமுழுக்கு வழிபாடு செய்வர்.
ஒவ்வொரு பொருளைக் கொண்டு திருமுழுக்கு செய்வதற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகக் கருதப்படுகிறது. அவைகளில் சில;
1. புனித நீர் - புண்ணிய நதிகளின் நீரினால் திருமுழுக்கு செய்வதால் மனதில் தெளிவு ஏற்படும்.
2. எண்ணெய் - எண்ணெயினால் திருமுழுக்கு செய்வதால் தெய்வத்தின் மீதும், பெற்றோர் மீதும் பக்தி ஏற்படும்.
3. மஞ்சள் - மஞ்சள் பொடியினால் திருமுழுக்கு செய்வதால் வீட்டில் மங்களம் நிலைக்கும்.
4. பால் - பாலில் திருமுழுக்கு செய்தால் மனதில் அமைதி ஏற்படும்.
5. தயிர் - தயிரில் திருமுழுக்கு செய்வதால் உடல் நலம் பெருகும்.
6. நெய் - நெய்யில் திருமுழுக்கு செய்வதால் சுக வாழ்வு கிடைக்கும்.
7. பன்னீர் - தூயப் பன்னீரால் திருமுழுக்கு செய்வதால் நற்பெயர், புகழ் கிடைக்கும்.
8. திருநீறு - திருநீறு கொண்டு திருமுழுக்கு செய்வதால் ஞானம் பெற முடியும்.
9. சந்தனம் - சந்தனத்தால் திருமுழுக்கு செய்தால் மறுபிறவி இருக்காது.
10. தேன் - தேனில் திருமுழுக்கு செய்வதால் இனிமையான குரல் கிடைக்கும்.
11. பஞ்சாமிர்தம் - பஞ்சாமிர்தம் கொண்டு திருமுழுக்கு செய்வதால் வாழும் காலம் அதிகரிக்கும்.
12. இளநீர் - இளநீர் கொண்டு திருமுழுக்கு செய்வதால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
13. அன்னம் - அன்னம் கொண்டு திருமுழுக்கு செய்வதால் அரச வாழ்வு அமையும்.
14. மாவுப் பொடி - மாவுப்பொடி கொண்டு திருமுழுக்கு செய்வதால் செல்வம் குறையாதிருக்கும்.