விபூதி யோகம்
பா. காருண்யா

விபூதி என்றால் “மகிமை அல்லது பெருமை” என்று பொருள்.
பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம், அர்ச்சுனன் அவரது விபூதிகள் (பெருமைகள்) பற்றிக் கேட்டான். அதற்குக் கிருஷ்ணர் தன் பெருமைகளை அர்ச்சுனனுக்கு விரிவாகக் கூறினார். அவை;
* நான் அனைத்து சீவராசிகளின் ஆத்மா; நண்பன்; தலைவன். அனைத்து சீவராசிகளின் படைப்பு-இருப்பு-அழிப்புக்கு காரணமாக இருப்பவன் நானே.
* நான் உலகப் படைப்புக்கு முன், பகவானிடம் ஒடுங்கி இருக்கும் பிரகிருதியின் ’சம்யா’ அவஸ்தையாக இருந்தேன். முக்குணங்களில் தடுமாற்றம் ஏற்பட்டதும் கிரியா சக்தி மேலோங்கியுள்ள ‘சூத்ராத்மா’ எனப்படும்.
* பிரம்மதேவன் நானே. ஞான சக்தி மேலோங்கியுள்ள ’சமஷ்டி புத்தி’ என்ற ’மஹத்’ தத்துவம் நானே. வெல்ல முடியாதவைகளில், நான் மனமாக இருக்கிறேன்.
* வேதத்தை அறிந்தவர்களில் நான் ஹிரண்யகர்பன்; மந்திரங்களின் மூன்று எழுத்துகளுடன் கூடிய “ஓம்” என்ற ’பிரணவ மந்திரம் ’நானே. (அ+உ+ம என்ற) எழுத்துக்களில் நான் ’அ’காரம்; சந்தங்களில் மூன்று பாதங்களை கொண்ட ’காயத்ரீ’ ஆக உள்ளேன்.
* அனைத்து வானவர்களுக்கும் நானே இந்திரன் (தலைவன்); எட்டு வசுக்களில் அக்னி; பன்னிரண்டு ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஏகாதச உருத்திரர்களில் நான் ’நீலலோஹிதன்’.
* பிரம்ம ரிஷிகளுள் நான் பிருகு முனிவர், நான், ராஜரிஷிகளில் மனு; தேவரிஷிகளில் நாரதர்; பசுக்களில் காமதேனுஆக இருக்கிறேன்.
* சித்த புருஷர்களில் நான் ’கபிலர்’; பறவைகளில் ’கருடன்’; பிரசாபதிகளில் ’தட்சப் பிரசாபதி; பித்ருக்களில் ’அர்யமா’ ஆக இருக்கிறேன்.
* அசுரர்களில் நான் பிரகலாதன்;கணிப்படுபவற்றில் நான் " காலம் ". நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன் நானே. யட்ச-அரக்கர்களில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் நானே.
* சிறப்பு மிக்க யாணைகளில் நான் ஐராவதம்; வெளிச்சமும் வெம்மையும் தருபவைகளில் நான், சூரியன்; குதிரைகளில் நான் உச்சைசிரவஸ்; உலோகங்களில் தங்கம்; தண்டனை கொடுப்பவர்களுள் யமன்; விஷமுள்ள நாகங்களில் ‘வாசுகி’ எனும் நாகம்.
* விஷமற்ற நாகங்களில் நான் ஆதிசேஷன்; விலங்குகளில் நான் சிங்கம்; நால்வகை ஆசிரமங்களில் நான் சந்நியாசம்; புண்ணிய தீர்த்த நதிகளில் நான் கங்கை; வில்லேந்தியவர்களில் முப்புரம் எரித்த திரிபுராந்தகர் எனும் சிவன் ஆக இருக்கிறேன். மரங்களில் அரசமரம்; உயரமான மலைகளில் இமயமலை நான்.
* புரோகிதர்களில் நான் வசிட்டர்; வேதம் அறிந்தவர்களில் பிரகஸ்பதி; படைத்தலைவர்களில் நான் முருகன்; நன்னெறிகளை பரவச் செய்பவர்களில் நான் பிரம்மா; விரதங்களில் நான் அகிம்சை ஆக உள்ளேன்.
பொருட்களை சுத்தம் செய்வதில் நான் நீர், காற்று, சூரியன், வாய்ச்சொல், அக்னி மற்றும் ஆத்மாவாக இருக்கிறேன். அஷ்டாங்க யோகங்களில் நான் சமாதி யோகமாக உள்ளேன்.
* ஆத்மா-அனாத்மா தர்க்கத்தில் நான் பிரம்ம வித்தை, பெண்களில் மனுவின் மனைவியான சதரூபை நானே; பிரம்மச்சாரிகளில் நான் சனத்குமாரர், அறிவாற்றல் பெற்றவர்களில் நான் ‘தேவலர்’, என்னிடம் தீவிரபக்தி செலுத்துபவர்களில் நீயாக (அருச்சுனன்) உள்ளேன். கிம்புருசர்களில் நான் அனுமான், வித்தியாதரர்களில் நான் சுதர்சனன் ஆக இருக்கிறேன்.
* விஷ்ணு பக்தர்களால் பூஜிக்கத்தக்க வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், நாராயணர், ஹயக்கிரீவர், வராகர், நரசிம்மர், வாமனர், என்ற ஒன்பது மூர்த்திகளில், நான் வாசுதேவ மூர்த்தியாக உள்ளேன்.
பேரொளி வீசுபவைகளில் நான் சூரியன், சந்திரன், அக்னி மற்றும் நட்சத்திரங்களாக உள்ளேன்.
* வேதங்களில் சாமவேதமாக இருக்கிறேன். உயிரினங்களில் ஞான சக்தியாக உள்ளேன். நீர் நிலைகளில் பெருங்கடலாகவும், கந்தவர்களுள் சித்ரரதன் ஆகவும், ஆயுதங்களில் வச்சிராயுதம் ஆகவும், சாஸ்திர முறையில் மகப்பேற்றுக்குக் காரணமான மன்மதன் ஆகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கும், நீர் தேவதைகளுக்கும் நான் வருணன் ஆகவும், பறவைகளில் கருடன் ஆக உள்ளேன்.
* ஆயுதம் தாங்கியவர்களில் இராமர் ஆகவும், மீன் இனங்களில் முதலையாகவும், மாதர்களுள் கீர்த்திதேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், வாக்தேவியாகவும், மேதா தேவியாகவும், சமா தேவியாகவும் இருக்கிறேன். நான் வஞ்சகர்களுள் சூதாட்டமாக உள்ளேன். பாண்டவர்களுல் அருச்சுனன் ஆக உள்ளேன். முனிவர்களில் வேதவியாசராகவும், கவியரசர்களில், சுக்கிராச்சாரியாகவும் நானே இருக்கிறேன்.
* நானே ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் உள்ளேன். நானே பஞ்சபூதங்களாகவும், சீவனாகவும், பிரகிருதி, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாகவும், அவற்றிக்கும் அப்பாலுள்ள பிரம்மமாகவும் விளங்குவதும் நானே.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|