ரிக்வேதத்தின் 1028 சூக்தங்களில், இறுதி சூக்தமாக அமைந்திருக்கும் ’ஸம்ஜ்ஞான சூக்தம்’ நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஊக்குவிக்கச் சொல்லப்படும் ஒரு மந்திரமாகும். இம்மந்திரம் பள்ளிகளிலும், ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களிலும் பொதுவாக சொல்லப்படுகின்றது. இம்மந்திரத்தின் உட்பொருள் சமத்துவத்தையும் ஒற்றுமையும் ஆழமாக உணர்த்துவதோடு, பரம்பொருளிடம் உலக சமத்துவத்துக்காக வேண்டுவதாகவும் அமைந்துள்ளது.
ஸம்ஜ்ஞானம் என்றால் ஒருமித்த உணர்வு எனப் பொருள்படும். இந்த சூக்தம் 4 வரிகளை உடையது.
ஸம்ஜ்ஞான சூக்தம்
“ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னே விஷ்வான்யர்யா
இலஸ்பதே ஸமித்யஸே ஸநோ வஸூன்யா பரா (1)
ஸம்கச்சத்வம் ஸம் வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதாபூர்வே ஸம் ஜானானா உபாஸதே (2)
ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானீ ஸமானம் மனஸ்ஸஹ சித்தம் ஏஷாம்
ஸமானம் மந்த்ரம் அபி மந்த்ரயே வஹ்ஸமானேன வோஹவிஷா ஜுஹோமி (3)
ஸமானீ வ ஆகூதிஸ்-ஸமானா ஹ்ர்தயானி வஹ்
ஸமானம் அஸ்து வொ மனோயதா வஸ்ஸுஸஹாஸதி” (4)
இதன் பொருள்
1. உலகின் ஒரு திசையில் சூரியன் உதித்திருந்தாலும், அது உலகத்தின் எல்லாப் பக்கத்திலும் தன் ஒளியைப் பரப்பி, எல்லா உயிர்களுக்கும் ஒரே வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றது. அக்கினி வடிவாய் விளங்கும் இறைவன், உலகெங்கும் வாழும் எல்லோரையும் ஒன்றிணைக்கட்டும்.
2. நாமனைவரும் ஒன்றிணைவோம்! ஒற்றுமையாக ஒருமித்த உணர்வோடு, ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வோம்! நம்முடைய மனங்களும் எண்ணங்களும் ஒன்றாகட்டும்! இந்த பரந்து விரிந்த உலகத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்வோம்!
3. நம் பிரார்த்தனைகள் ஒன்றே! நம் தேவைகள் ஒன்றே! நம் எண்ணங்கள் ஒன்றே! நம் மனங்கள் ஒன்றே! நம் சித்தங்கள் ஒன்றே! நம் அறிவுத்திறன்கள் ஒன்றே! நாம் எல்லோரும் இறைவன் முன்னிலையில் ஒன்றே!
4. நம் நோக்கங்கள் ஒன்றே! நம் தீர்மானங்கள் ஒன்றே! நம் சிந்தனைகள் ஒன்றே! ஒருமித்த உணர்வோடு நாம் செயல்பட்டால், ஒற்றுமையோடு வாழ்ந்தால், உலகெங்கும் சமாதானமும் இன்பமும் நிறைந்திருக்கும்.