ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒழுக்க நெறியுடனும் தூய்மையான அறிவுடனும் வாழ்தலே ஒரு யாகம்தான் என்று சொல்லப்படுகின்றது. இதனை இந்துக்கள் அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறார்கள். இதற்கு அடுத்ததாக இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய யாகங்கள் இருக்கின்றன. அவை பஞ்ச மகா யாகங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதைப் பற்றி கிருஷ்ண யஜுர்வேதம் (2.10) குறிப்பிடுகிறது.
1. பிரம்ம யாகம்
பகவத் கீதை, திருக்குறள் போன்ற நல்ல நூல்களைக் கற்றல், நல்லறிவை வளர்த்துக் கொள்தல், தன்னுடைய நிலையை மேம்படுத்திக் கொள்தல், மற்றவர்களுக்கு நல்லறிவைக் கற்றுத் தருதல். இது மிகவும் முக்கியமான யாகமாகும்.
2. தேவ யாகம்
தினமும் ஒருவேளையாவது தியானத்தில் ஈடுபட வேண்டும். தெய்வங்களுக்கு நன்றி கூறும் விதமாக வழிபாட்டில் ஈடுபட வேண்டும். கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும்.
3. பித்ரு யாகம்
முன்னோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும், அவர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு தர்ப்பனம் / நினைவு நாள் மேற்கொள்ள வேண்டும். மேலும், முன்னோர்கள் சொன்ன நல்லச் சொற்களையும், அவர்கள் வகுத்து தந்த நல்வழியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
4. மனுஷ்ய யாகம்
சக மனிதர்களை சமமாக நோக்க வேண்டும். மனிதர்களிடம் கருணை காட்ட வேண்டும். தேவைப்படும் மனிதர்களுக்கு உதவ வேண்டும். பசித்தவருக்கு உணவு தர வேண்டும்.
5. பூத யாகம்
பூதம் என்றால் இயற்கை வாழிகள் எனப் பொருள்படும். இயற்கையையும், இயற்கை அன்னையின் இதரக் குழந்தைகளையும் அன்போடு பராமரிக்க வேண்டும். இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் விதமாக மிருகங்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்துக்கள் இந்த ஐந்து யாகங்களையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த ஐந்து யாகங்களும் மிக உயர்வான மற்றும் தலைச்சிறந்த யாகங்கள் ஆகும்.