நம்பாடுவான் பிரம்மராட்சசனுக்குச் சத்தியம் செய்து கொடுத்த போது, 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராகப் புராணத்திலேக் காணலாம். அவை;
1. சத்தியம் தவறுதல்
2. பிறன் மனைவியிடம் இணைதல்.
3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்குச் சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.
4. பிறருக்குத் தானம் செய்த பொருளைத் திரும்பப் பெறுதல்.
5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.
6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.
7. உணவு கொடுத்துப் பசியாற்றியவனை நிந்தித்தல்.
8. ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.
9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.
10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.
11. நண்பன் மனைவி மீது இச்சை கொள்ளுதல்.
12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.
13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும், இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.
14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.
15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.
16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.
17. வாசுதேவனை விட்டு இதர தெய்வங்களை, தேவதைகளை உபாசனை செய்தல்.
18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.
மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்குக் கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்து சேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.